உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தன்னலமற்ற சேவையே சமுதாயத்தை உயர்த்தும் சொற்பொழிவில் அறிவுறுத்தல்

தன்னலமற்ற சேவையே சமுதாயத்தை உயர்த்தும் சொற்பொழிவில் அறிவுறுத்தல்

சூலூர்; "நாம் செய்யும் தன்னலமற்ற சேவையே சமுதாயத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்," என, சமூக ஆர்வலர் ஆனந்த ரகுநாதன் அறிவுறுத்தினார்.

முத்துக்கவுண்டன் புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், 52 வது மாதாந்திர விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்ச்சி விவேகானந்தர் அரங்கில் நடந்தது. இயக்க தலைவர் சம்பத்குமார் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். 

மனதில் நின்ற மனிதர்கள் என்ற தலைப்பில், சமூக ஆர்வலர் ஆனந்த ரகுநாதன் பேசியதாவது: இந்த உலகில் பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்று இருக்ககூடாது. அப்படி யாரவது நினைத்துக் கொண்டிருந்தால் அதை மனதில் இருந்து அகற்றி விடுங்கள். புதிய அத்தியாயத்தை துவங்குங்கள். நமக்கு நாம் தனக்கென வாழாமல் பிறருக்கென வாழ்வது பெரிய பாக்கியம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். 1840 ஆண்டில் காசலு நாராயண ஷெட்டி என்பவர், அன்றைய ஆங்கிலேய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட டார்ச்சர் எனும் சட்டத்தை எதிர்த்து போராடி வெற்றி பெற்றார். அவர்தான் சென்னையில் பச்சையப்பா கல்லூரி உருவாக காரணமாக இருந்தவர். நமது பகுதியை சேர்ந்த ஜி.டி., நாயுடு, மூன்றாம் வகுப்பு மட்டுமே ந

படித்திருந்தார். ஆனாலும், சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினார். பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி தொழிற்புரட்சிக்கு வித்திட்டார். அரசு பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி உருவாக காரணமாக இருந்தார். சுவாமி சித்பவானந்தர் மனதில் சமுதாயத்துக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததால் தான், பல பள்ளிகளை உருவாக்கினார். ஆன்மீக, விவசாய அறிவு கொண்ட கல்வி முறைகளை கொண்டு வந்தார். தென்காசியை சேர்ந்த ராமகிருஷ்ணன் ராணுவத்தில் பணியில் இருந்தார். அங்கு ஏற்பட்ட பாதிப்பால், கழுத்துக்கு கீழ் எதுவும் செயல்படாத நிலை ஏற்பட்டது. அதை நினைத்து அவர் முடங்கி விடவில்லை. அமர் சேவா சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி, ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகளுக்கு, கல்வி உள்ளிட்ட பல பயிற்சிகளை வழங்கி வருகிறார். பீகாரில் வாழ்ந்த மாஞ்சி என்பவர் தனிமனிதனாக, 22 ஆண்டுகள் உழைத்து, ஒரு மலையையே உடைத்து ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்கு செல்ல வழி ஏற்படுத்தினார். இதுபோன்ற எண்ணற்ற மறக்கமுடியாத மனிதர்கள் செய்த செயல்களால் சமுதாயத்துக்கு வழி காட்டினர். நாம் செய்யும் தன்னலமற்ற சேவையே சமுதாயத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை மறந்து விடக்கூடாது.

இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !