உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷிவந்தியம் கோவில்களில் வைகாசி விசாகம் சிறப்பு பூஜை

ரிஷிவந்தியம் கோவில்களில் வைகாசி விசாகம் சிறப்பு பூஜை

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள கோவில்களில் வைகாசி விசாகத்தையொட்டி முருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது.


வைகாசி விசாகம் முருகப்பெருமான் அவதரித்த நாள். அன்றைய தினத்தில் விரதமிருந்து மனமுருகி முருகனை வழிபட்டால் கல்வி, அறிவு, ஞானம், தடைகள் விலகும் என நம்பிக்கை உள்ளது. இதையொட்டி ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன.


சூளாங்குறிச்சியில் உள்ள பழமை வாய்ந்த வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில் மூலவருக்கு பால், தேன், இளநீர், மஞ்சள் உட்பட 16 வகையான திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, பல வண்ண மலர்களால் அலங்கரித்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ரிஷிவந்தியத்தில் உள்ள பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், தனி சன்னதியில் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி அருள்பாலித்து வருகின்றனர். வைகாசி விசாகத்தையொட்டி நேற்று மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுப்ரமணிய சுவாமிக்கு சந்தனம், சொர்ணம், பஞ்சாமிர்தம், தயிர், விபூதி உட்பட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, பல வண்ண மலர்களால் அலங்கரித்து தீபாராதணை காண்பிக்கப்பட்டது. நாகராஜ், சோமு குருக்கள் பூஜைகளை செய்தனர். வாணாபுரம் அடுத்த ஆதிதிருவரங்கத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி சுவாமி வீதியுலா நேற்று நடந்தது. இதையொட்டி நவபாஷனத்திலான மூலவர் அரங்கநாதருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் அரங்கநாத பெருமாளை பக்தர்கள் தோலில் சுமந்தவாறு துாக்கி சென்றனர். வழிநெடுக்கிலும் பொதுமக்கள் சுவாமிக்கு பூஜை பொருட்களை வழங்கி தரிசனம் செய்தனர். மாட வீதிகள் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் சுவாமியை கோவிலுக்கு துாக்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !