பாடலீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா; வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் தரிசனம்
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த, 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், வீதியுலா நடந்து வருகிறது. கடந்த 26ம் தேதி அதிகார நந்தி கோபுர தரிசனம், தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. இன்று காலை மூலவர் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அலங்கார மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, யாத்ராதானம் முடிந்து 24 கால் மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் சிலைகளை வைத்து தீபாராதனை நடந்தது. பின், கோவில் உள்பிரகாரம் வலம் வந்து, கோவில் முன் மண்டபத்தில் எழுந்தருளினர். வாத்தியங்கள் முழுங்க பெரிய தேரில் விநாயகர், சண்டிகேஸ்வரர், சோமஸ்கந்தர் எழுந்தருளினர். பராசக்தி அம்மன் அம்மன் சிறிய தேரிலும், மற்றொரு சிறிய தேரில் முருகனும் எழுந்தருளினர்.
அமைச்சர் ராஜ்குமார் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். விஷ்ணு பிரசாத் எம்.பி., ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி, உதவி ஆணையர் சிவக்குமார், கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். நாகராஜ் குருக்கள் தலை தமையிலான குருக்கள் பூஜைகளை செய்தனர். தேரடி வீதி, சங்கர நாயுடு வீதி, சஞ்சீவி நாயுடு வீதி, போடி செட்டித்தெரு வழியாக தேர் சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இரவு தேரில் இருந்து இறங்கி தேரடியில் மண்டகப்படி பூஜை, பஞ்சமூர்த்திகள் கோவிலை வந்தடைதல் நிகழ்வு நடந்தது. நாளை காலை 9:00 மணிக்கு நடராஜர் தரிசனம், வீதியுலா, திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கிறது. 1ம் தேதி இரவு தெப்பல் உற்சவம், 2ம் தேதி காலை திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது.