உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி விஜயராகவ பெருமாள் கருட வாகனத்தில் திருவீதியுலா

திருத்தணி விஜயராகவ பெருமாள் கருட வாகனத்தில் திருவீதியுலா

திருத்தணி; திருத்தணி விஜயராகவ பெருமாள், கருட வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான கோட்ட ஆறுமுக சுவாமி கோவில், நந்தி ஆற்றின் கரையோரம் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள விஜயராகவ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் திருத்தணி நகர மளிகை கடை வியாபாரிகள் சங்கம் சார்பில், கருடசேவை உத்சவம் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அந்த வகையில், திருத்தணி நகர மளிகை கடை வியாபாரிகள் சங்கம், விஜயராகவ பெருமாள் சுவாமி கருட சேவை விழா குழு மற்றும் திருத்தணி நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில், கருடசேவை விழா இன்று நடந்தது. விழாவை ஒட்டி, காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில், காலை 8:00 மணிக்கு, கருட வாகனத்தில் உற்சவர் விஜயராகவ பெருமாள் எழுந்தருளி, திருத்தணி நகர முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பின், மாலை 5:00 மணிக்கு, ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில், உற்சவர் விஜயராகவ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, இரவு 8:00 மணிக்கு உற்சவர் பெருமாள், மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு, திருத்தணி நகர வீதிகளில் உலா வந்து, நள்ளிரவில் விஜயராகவ பெருமாள் கோவில் வளாகத்தை அடைந்தார். முன்னதாக, மதியம் வியாபாரிகள் சங்கம் சார்பில், 1,500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !