காஞ்சிபுரம் கோவில்களில் குரு பெயர்ச்சி விழா விமரிசை
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வட்டாரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில், இன்று குரு பெயர்ச்சி விழா விமரிசையாக நடந்தது.
குரு பகவான் இன்று காலை 11:00 மணியளவில், மிதுன ராசியில் இருந்து, கடக ராசிக்கு பிரவேசித்தார். இதையொட்டி, காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் முடங்கு வீதியில், குரு கோவில் என அழைக்கப்படும் கமலாம்பிகை சமேத காயாரோகணீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா இன்று நடந்தது. இதில், நேற்று காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 11:00 மணிக்கு யானை வாகனத்தில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய குரு பகவானுக்கு மஹாதீப ஆராதனையும் நடந்தது. மாலை 6:30 மணிக்கு ஜோதிடர் கார்த்திகேயன் அனைத்து ராசிக்கும் உண்டான குரு பெயர்ச்சி பலன் கூறினார். இதில், திரளான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். நாளை மதியம் 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், சந்தன காப்பும், மாலை 6:00 மணிக்கு சிவபூத கன வாத்தியங்கள் இசைக்க ஊஞ்சல் சேவை உத்சவமும் நடக்கிறது.
குபேர விநாயகர் கோவில்: காஞ்சிபுரம் ஓரிக்கை, பேராசிரியர் நகர் பகுதி 2ல் உள்ள குபேர விநாயகர் கோவிலில், குரு பெயர்ச்சி விழாவையொட்டி இன்று காலை 8:30 மணிக்கு குபேர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10:30 மணிக்கு ஹோமமும், காலை 11:00 மணிக்கு குருபகவானுக்கு கலசாபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. காலை 11:15 மணி முதல், குரு பகவானுக்கு சிறப்பு அர்ச்ச்னை நடந்தது.
விருட்ச விநாயகர் கோவில்: காஞ்சிபுரம் – வந்தவாசி நெடுஞ்சாலையில் கூழமந்தல் ஏரிக்கரையில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் தாரை சமேத குரு பகவான் திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். குரு பெயர்ச்சியையொட்டி தாரை சமேத தேவகுரு பகவானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் மஹா அபிஷேகம் நடந்தது. தொ டர்ந்து மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த குரு பகவானுக்கு மஹா தீபாராதனை நடந்தது.