அரோகரா சரண கோஷத்துடன் பழநியில் தைப்பூச கொடியேற்றம்!
பழநி: வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா சரண கோஷத்துடன், பழநி தைப்பூச திருவிழா கொடியேற்றம், நேற்று நடந்தது. ஜன., 27ல் தைப்பூச தேரோட்டம் நடைபெறும். பழநி, முத்துக்குமார சுவாமி சன்னதியில், ஆறு கலசங்கள் வைத்து, மயூரயாகம், சோடஷ அபிஷேகமும், சிறுகால சன்னதியில், பெரியநாயகியம்மன் கோவிலில் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியும், நேற்று நடந்தது.கொடிப் படம் நான்கு ரத வீதிகளிலும், உட்பிரகாரத்திலும் சுற்றி வந்து, கொடி கட்டி மண்டபத்தை அடைந்தது. முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் கொடி கட்டி மண்டபத்திற்கு எழுந்தருளினர். காலை, 10:30 மணிக்கு, கொடியேற்றம் நடந்தது.கூடியிருந்த பக்தர்கள், "பழநி முருகனுக்கு அரோகரா... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என, சரணகோஷம் எழுப்பினர்.கொடியேற்றத்துடன் துவங்கி, விழா நிகழ்ச்சிகள், 10 நாட்கள் நடைபெறும். விழாவின் ஆறாம் நாளான, ஜன., 26ல், இரவு, 7:00 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும். ஜன., 27ம் தேதி, தைப்பூசம். அதிகாலையில் சுவாமி, சண்முக நதி தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார். தேர் ஏற்றம் செய்யப்பட்டு, மாலை, 4:20 மணிக்கு தேரடி தேர் நிலையில் இருந்து, தேரோட்டம் ஆரம்பம் ஆகி, நான்கு ரத வீதிகளில் செல்லும்.விழாவின், 10ம் நாளான, ஜன., 30ல், தெப்போற்சவம் நடைபெறும். மலைக் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், யானைப் பாதை வழியாகவும், இறங்கும் பக்தர்கள் படி வழியாகவும் இறங்க வழி செய்யப்பட்டுள்ளது.