கால்நடைகளுக்கு நோய் வராமலிருக்க கால்நடைகளை பலியிட்ட விநோதம்!
காஞ்சிபுரம்: கால்நடைகளுக்கு நோய் வராமலிருக்க, தேனம்பாக்கம் கிராம மக்கள், கால்நடைகளை பலி கொடுத்தனர். காஞ்சிபுரம் அடுத்துள்ளது தேனம்பாக்கம். இங்கு, 3,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியுள்ளனர். சிலர் மாட்டு வண்டி வைத்துள்ளனர். வீடுகளில், ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக, கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவி வருகிறது. நோய் காரணமாக, கால்நடைகள் உணவு சாப்பிட முடியாமல் தவித்து வந்தன.தகவல் அறிந்து, காஞ்சிபுரம் கால்நடை மருத்துவர்கள், தேனம்பாக்கத்தில் முகாமிட்டு, நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். அதன்பிறகும் திருப்தி அடையாத கிராம மக்கள், பழைய முறைப்படி"கழிப்பு எடுக்க முடிவு செய்தனர். இதற்காக கால்நடைகளை வைத்திருப்போரிடமிருந்து, நன்கொடையாக, 7,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
கழுத்து அறுத்து காவு: நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலை, 11:00 மணிக்கு, பன்றி, ஆடு, சேவல் ஆகியவற்றை வாங்கி வந்து, அவற்றின் மீது மஞ்சள் நீர் தெளித்து, நெற்றியில் திலகமிட்டு, கழுத்தில் மாலை அணிவித்து, கிராமத்தின் நுழைவு வாயிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு, பொரிகடலை, ஐந்து வண்ணத்தில் சோறு, கருப்பு, சிவப்பு நிற கயிறுகள், ஆகியவற்றை வைத்து படையலிட்டனர். பகல், 12:00 மணிக்கு, பன்றி, ஆடு, கோழி ஆகிவற்றை பலியிட்டனர்.தலைகளுடன் ஊர்வலம் அதன்பின் பலியிடப்பட்ட, பன்றி, ஆடு, கோழி, ஆகியவற்றின் தலைகளை கூடைகளில் வைத்து, கிராமத்தின் மூன்று திசைகளுக்கும் கொண்டு சென்று, எல்லையில் கற்பூரம் ஏற்றினர். வழி எங்கும் கோவிந்தா, கோவிந்தா, என முழுக்கமிட்டபடி சென்றனர். இறுதியாக கிராமத்தின் கிழக்குப் பகுதி எல்லைக்கு சென்று, தலைகளை வைத்துவிட்டு திரும்பினர். இவ்வாறு செய்தால் கால்நடைகளுக்கு நோய் வராது என்பது, அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.