நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம்
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் திருவிழாவில் கைலாசநாதர் -செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் -செண்பகவல்லி அம்மன் கோவிலின் வைகாசி பெருந்திருவிழா கடந்த மே.21 கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் அம்மன் சிம்மம், மயில், பூதம், அன்னம், யானை, ரிஷப வாகனங்களில் எழுந்தருளி கோவில்பட்டி பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாக வந்து நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவில் நேற்று கைலாசநாதர் -சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம் மேடை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெறுகிறது. நாளை பூப்பல்லாக்கு நிகழ்ச்சியும், நாளை மறுநாள் காலை உற்சவ சாந்தி விழாவும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர்.