உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பந்தலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்; ஜப்பான் பக்தர்கள் பங்கேற்பு

பந்தலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்; ஜப்பான் பக்தர்கள் பங்கேற்பு

பந்தலூர்: பந்தலூர் முருகன் கோவில் திருவிழாவில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


பந்தலூரில் பழமை வாய்ந்த முருகன் கோவில் அமைந்துள்ளது. இதன் புனரமைப்பு பணிகள் அருள்மிகு ஸ்ரீ முருகன் திருக்கோவில் அறக்கட்டளை சார்பில், நடந்தது. பணிகள் நிறைவு பெற்ற நிலையில் கும்பாபிஷேக விழா கடந்த 27ஆம் தேதி காலை பூர்வாங்க மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில், நேற்று காலை பூர்வாங்க பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு, தேவாரம், திருப்புகழ், திருவாசகம் சிவபுராணம் பாராயணம் செய்யப்பட்டது. தொடர்ந்து யாத்திரை தானம், கும்பங்கள் மூலாலயம் பிரவேசம் நடந்தது. அதனைத் தொடர்ந்து பக்தி பரவசத்துடன், அரோகரா கோஷம் முழங்க அருள்மிகு மூலவர் முருகப் பெருமானுக்கு, மகா கும்பாபிஷேகம் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மஹா அபிஷேகம், தசதானம், தச தரிசனம் சர்வ அலங்கார மஹா தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அன்னதானம், திருக்கல்யாண நிகழ்ச்சி, சுவாமி உள் வீதி உலா இடம்பெற்றது. மூன்று நாட்கள் நடந்த பூஜைகள் மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில், தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று அருள் பெற்று சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைவர் ஹரிராமன், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் சிவராஜ் தலைமையில் நிர்வாக குழுவினர், பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேக பூஜைகளை ரமேஷ் குருக்கள், சிவ ஸ்ரீ ராஜசேகர சுவாமிகள் தலைமைதான குழுவினர் செய்திருந்தனர்.


கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற ஜப்பான் நாட்டு பக்தர்கள்; சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் குறிஞ்சி செல்வன் தலைமையில் ஜப்பானில் சேர்ந்த குருஜி மஹாகிடேதீபக்அவயோமா தலைமையில் 25 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர் பங்கேற்றனர். அத்துடன் கோவில் புனரமைப்பு பணி மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு உதவிகளையும் செய்துள்ளனர். இவர்களை கோவில் கமிட்டி நிர்வாகம் பரிவட்டம் கட்டி, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அத்துடன் சினிமா நடிகை ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ் ஆகியோரும் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர். தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும் நிலையில், பக்தர்கள் பங்கேற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !