எமனேஸ்வரத்தில் குடி கொண்ட காஞ்சி வரதராஜ பெருமாள்
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் போன்று சிறப்பு வாய்ந்ததாகும். வேகவதி என்னும் வைகை நதியின் வடபுறத்தில் மல்லிகார்சுனபுரம் என்றும், எமன் ஈஸ்வரனை பூஜித்து சாப விமோசனம் பெற்றதால் எமனேஸ்வரம் என்ற பெயருடனும் இப்பகுதி வழங்குகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த நயினார்கோவில் வரலாற்றில், பொதிகை மலையை கடக்க அகத்தியர் சென்றபோது எமனேஸ்வரமுடையவரை வணங்கி சென்றதாக வரலாறு கூறுகிறது. 500 ஆண்டுகளுக்கு முன்பு சவுராஷ்டிர மகான் சுகந்த தூப தீர்த்தார்ய சுவாமிகள் எமனேஸ்வரத்தில் தங்கி பக்தி பரப்பியதாக வரலாறு உள்ளது. இதுபோன்ற பெருமை பெற்ற எமனேஸ்வரத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலை உருவாக்கி சவுராஷ்டிர சபையினர் நிர்வகித்து வருகின்றனர். பட்டு நூல்காரர்கள் என்ற சிறப்பு பெயருடன் பட்டு உற்பத்தியில் முதன்மை பெற்றவர்களாக திகழ்கின்றனர். கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம் பத்து நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடி வந்தனர். மேலும் மதுரை சித்திரை திருவிழா போன்று வைகாசி மாதம் விசாகத்தை மையமாக வைத்து வசந்த உற்ஸவம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளி தசாவதார காட்சிகளில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.
வரதராஜ பெருமாள் பிரதிஷ்டை: இக்கோயிலின் அர்ச்சகரின் கனவில் பெருமாள் தோன்றி அருளியபடி, பரமக்குடி அருகே உள்ள கால்வாயில் காஞ்சி வரதராஜ பெருமாளை போன்று ஒரு சிற்பம் காணப்பட்டது. 1932ம் ஆண்டு பெருமாள் பிரதிஷ்டை செய்யப்பட்டார். கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோயிலின் முன்பு காவல் தெய்வம் கருப்பணசாமி அருள்பாலிக்கிறார். சவுராஷ்டிர மகா ஜனங்களின் ஒத்துழைப்புடன் கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், ஆறுகால்மண்டபம், கருட மண்டபம், பெருந்தேவி தாயார் சன்னதி, வரதராஜ பெருமாள் புண்ணிய கோடி விமானம் கட்டி 1947ம் ஆண்டு ஸ்ரீ பெருந்தேவி வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 2002ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட வாஸ்து நடந்து 2006 ஜூலை மாதம் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. எமனேஸ்வரம் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் மலரில் இத்தகவல் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இதேபோல் தொடர்ந்து பல்வேறு திருப்பணிகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபை நிர்வாகிகள் செய்துள்ளனர்.