நரசிம்மநாயக்கன்பாளையத்தில் கத்தி போடும் திருவிழா; பக்தர்கள் பக்தி பரவசம்
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவையொட்டி, 27ம் தேதி விக்னேஸ்வர பூஜை, நவகிரக ஹோமங்கள், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கோ பூஜை, புனித மண் எடுத்தல், மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கிராம சாந்தி ஆகியன நடந்தன. இரவு தீபாராதனை, சதுர் வேத பாராயணம் ஆகியன நடந்தன. 28ம் தேதி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து, அலங்காரம், தச தரிசனம், மகா தீபாராதனை நடந்தன. இன்று காலை, 6:00 மணிக்கு நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகர் கோயிலில் இருந்து எல்லப்பாளையம் வீரகுமாரர்களின் சக்தி அழைத்தலும் மற்றும் ஆலாங்கொம்பு வீரகுமாரர்களின் அலங்கார அலகு சேவை எனும் கத்தி போடும் திருவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அம்மன் திருக்கோயில் வந்தடைதல், மகா தளிகை பூஜை நடந்தது. மாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.