திருக்கோஷ்டியூரில் வசந்த உற்ஸவம் நிறைவு; மணிமுத்தாற்றில் கஜேந்திர மோட்சம்
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் வசந்த உற்ஸவ விழாவை முன்னிட்டு கருவேல்குரிச்சி மணிமுத்தாற்றில் நடந்த கஜேந்திர மோட்ச வைபவத்தை பக்தர்கள் தரிசித்தனர்.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வசந்த உத்ஸவம் நான்கு நாட்கள் நடைபெறும். அகத்திய முனிவரின் சாபத்தால் கஜேந்திர யானையாக மாறிய மன்னனுக்கும்,முதலையாக மாறிய கந்தர்வனுக்கும் விஷ்ணு சக்கராயுதத்தால் சாப விமோசனம் பெறும் புராணத்தை விளக்கும் ‛ கஜேந்திர மோட்சம்’ வைபவம் நான்காவது நாளில் நடைபெறும். மே 29ல் கோயில் ஆண்டாள் சன்னதி அருகில் யாகசாலை பூஜைகள் துவங்கி பெருமாளுக்கு காப்புக்கட்டி உத்ஸவம் துவங்கியது.
மறுநாள் சர்வ அலங்காரத்தில் சுவாமி ஆஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, கருவேல்குரிச்சி மணிமுத்தாறு மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கருவேல்குரிச்சி மண்டகப்படி பூஜைகள், தீபராதனை நடந்தது. இன்று அதிகாலை 5:50 மணிக்கு கருடவாகனத்தில் பெருமாள் மண்டபத்திலிருந்து புறப்பாடாகி,பக்தர்களுடன் ஊர்வலமாக மேளதாள,வாத்தியங்களுடன் மணிமுத்தாற்றில் எழுந்தருளினார். வழியில் கிராமத்தினர் அர்ச்சனை செய்து பெருமாளை வழிபட்டனர். தொடர்ந்து கோயில் யானை வந்தவுடன் ‛கஜேந்திர மோட்ச’ பூஜைகளை பட்டாச்சார்யர்கள் நடத்தினர்.மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. சூரிய உதயத்தின் போது, கஜேந்திர யானை ஆற்றுக்குள்ளிருந்து மூன்று முறை பிளிறியது. தொடர்ந்து பெருமாளின் சந்தனம்,சடாரி யானைக்கு சார்த்தப்பட்டு மோட்சம் அளிக்கப்பட்டது. பின்னர், யானைக்கு பட்டாச்சார்யர்கள் மாலை அணிவித்து பழம் வழங்கினர். தொடர்ந்து யானை மீது ஆற்று நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் யானை பெருமாளை வணங்கி மூன்று முறை வலம் வந்து வழிபட்டது. ஏராளமான கிராமத்தினர் கூடி மோட்சம் வேண்டி பிரார்த்தித்தனர். பின்னர் சுவாமி மீண்டும் கோயில் எழுந்தருளினார். ஏற்பாட்டினை தேவஸ்தானம்,கருவேல்குரிச்சி கிராமத்தினர் செய்தனர்.