உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்

திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு ஐம்பெரும் கடவுளர்கள் மூன்று தேர்களில் எழுந்தருள தேரோட்டம் நடந்தது. இன்று இரவில் தெப்பம் நடக்கிறது.


குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி விசாக விழா 10 நாட்கள் நடைபெறும். மே 21ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து தினசரி இரவில் வாகனங்களில் சுவாமி,அம்பாள் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று ஒன்பதாம் நாளை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு - சுவாமி, அம்பாள், பிரியாவிடை, சிவகாமி அம்பாள், விநாயகர் மூன்று தேர்களில் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலையில் திருப்புத்துார், தம்பிபட்டி, புதுப்பட்டி, தென்மாப்பட்டி, திருத்தளிநாதர் பட்டி, வாணியம்பட்டி, கே.வைரவன்பட்டி, ஆலம்பட்டி, மாதவராயன்பட்டி, கீழநிலை, அரிபுரம், மெய்யப்பட்டி, பனையம்பட்டி, பையூர், நெடுமரம் கிராமத்தினர் கோயில் வந்தடைந்தனர். மாலை 5:05 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலையில் தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் தேரோட்டம் துவங்கியது. இன்று காலை 10:30 மணிக்கு சீதளி தெப்பக்குளத்தில் தீர்த்தம் வழங்குதலும், இரவு 8:00 மணிக்கு தெப்பமும் நடைபெறும்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !