மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி தேரோட்டம்
மதுரை; கூடலழகர் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தரிசனம் செய்து வருகின்றனர்.
மதுரை நகரின் மத்தியில் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் திருக்கோயில் 108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோவிலில் வைகாசி பெருந்திரு விழா 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து 14 நாட்கள் தினமும் காலை, மாலையில் பெருமாள் சிம்மம், கருடன், அனுமார், சேஷ, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்ட வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றுவருகிறது.
இதனை முன்னிட்டு மதுரை டி.எம்.கோர்ட் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள். ஸ்ரீ தேவி பூதேவி. தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தெற்கு மாரட் வீதி, திருப்பரங்குன்றம் சாலை, நேதாஜி சாலை, மேலமாசி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வழியாக வலம் வந்த தேரினை சாலைகளின் இருபுறங்களிலும் நின்றிருந்த ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை அலங்கார திருமஞ்சனமும் நாளை மறுநாள் சுவாமி குதிரை வாக னத்தில் வைகையாற்றில் இறங்கி ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அங்கு தசாவதார நிகழ்ச்சி நடைப்பெறவுள்ளது. இதை தொடர்ந்து கருட வாகனத்தில் புறப்பாடு நடைப்பெறுகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.