ராமகிருஷ்ண பஜனை மடத்தில் ஸ்ரீசீதா கல்யாண மகோத்ஸவம்
திருப்பூர்: திருப்பூர், ஓடக்காட்டில் உள்ள ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் ராமகிருஷ்ண பஜனை மடத்தில், மகா பெரியவர் ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஸ்ரீசீதா கல்யாண மகோத்ஸ்வ விழா நேற்று விமரிசையாக நடந்தது.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி அருளாசியுடன் நடந்த இந்த விழா நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு அஷ்டபதி பஜனையுடன் துவங்கியது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இரவு 8:00 மணிக்கு ஸ்ரீகணேசாதி தேவதா தியான கீர்த்தனை மற்றும் திவ்ய நாம பஜனைகள் முழங்க, பக்தர்கள் வழிபட்டனர். நேற்று காலை 8:00 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை நடைபெற்றது. தொடர்ந்து 9:00 மணிக்கு ஸ்ரீவசந்த மாதவ பூஜையும், 9:30 மணிக்கு கொட்னோத்ஸவமும் நடைபெற்றன. மதியம் 12:00 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீசீதா கல்யாண மகா உத்ஸவம் பக்தி பரவசத்துடன் நாதஸ்வர மங்கள வாத்தியங்கள் முழங்க நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, ஸ்ரீவசந்த மாதவ வீதி பூஜை மற்றும் வசந்த கேளிக்கைகள் கோலாகலமாக நடந்தேறின. நேற்று இரவு 10:00 மணிக்கு ஸ்ரீகோணாங்கிதாஸர் சேவை மற்றும் ஸ்ரீஆஞ்சநேய உத்ஸவத்துடன், மகா தீபாராதனை காட்டப்பட்டு விழா நிறைவடைந்தது.