உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துார் கோவில் வளாக ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திருச்செந்துார் கோவில் வளாக ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், 500 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகம், முடி காணிக்கை செலுத்தும் இடம், கிரி பிரகாரம் போன்ற இடங்களில், எவ்வித அனுமதியின்றி, பழக்கடைகள், பூக்கடைகள், பொம்மை, இனிப்பு வியாபாரங்கள், புகைப்பட விற்பனை கடைகள் என, 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

அந்த கடைகளை காலி செய்யுமாறு, கோவில் நிர்வாகம், சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது. ஆக்கிரமித்து வியாபாரம் செய்தவர்கள் மறுத்த நிலையில், அவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை, கோவில் நிர்வாகம் மேற்கொண்டது. இதற்காக கிரிபிரகாரம், காத்திருப்போர் அறை பகுதிகளில் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் தானாக, வெளியேறிச் செல்ல வேண்டும் என, காவல்துறையினர், பாதுகாப்பு பணியாளர்கள் மூலம் நேற்று, ஒலிபெருக்கி வாயிலாக அறிவுறுத்தினர்.

பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், நடைபாதைகளில் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால், பல ஆண்டுகளாக கோவில் வளாகத்தை நம்பி, அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும், பூ வியாபாரிகள், சிறு வியாபாரிகள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !