பரமக்குடி, நயினார்கோவில் சிவன் கோயில்களில் ஆனி திருமஞ்சனம்
பரமக்குடி: பரமக்குடி, நயினார்கோவில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம் நடந்தது.
சிவபெருமான் அபிஷேக பிரியராக போற்றப்படும் நிலையில் ஆனி மாத திருமஞ்சனம் நேற்று காலை அனைத்து சிவாலயங்களிலும் நடந்தது. அப்போது பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி கோயிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் சிவகாமசுந்தரி நடராஜர் மூர்த்திக்கு தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து உற்சவருக்கு பல்வேறு வகையான அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டன. பரமக்குடி மீனாட்சி அம்மன் கோயிலில் அருள் பாலிக்கும் சிவகாமசுந்தரி நடராஜமூர்த்திக்கு அபிஷேகம் நிறைவடைந்து தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
*எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயில் சிவகாமசுந்தரி நடராஜமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
நயினார் கோவில் நாகநாத சுவாமி கோவிலில் நடராஜ மூர்த்திக்கு நடந்த ஆனி திருமஞ்சன விழாவில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இதேபோல் மேல பெருங்கரை அட்டாள சொக்கநாதர், பார்த்திபனுார் உள்ளிட்ட அனைத்து சிவன் கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.