உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தை வரம் வேண்டி குழந்தை பொம்மைகளை தலை சுமையாக சுமந்து சென்ற பெண்கள்

குழந்தை வரம் வேண்டி குழந்தை பொம்மைகளை தலை சுமையாக சுமந்து சென்ற பெண்கள்

மானாமதுரை; மானாமதுரை அருகே ஏ.விளாக்குளம் கிராமத்தில் நடைபெற்ற குதிரை எடுப்பு திருவிழா மற்றும் செவ்வாய் சாற்றுதல் விழாவில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்டு குதிரைகளையும்,சுவாமி உருவங்களையும் தலைச் சுமையாக சுமந்து சென்றனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஏ.விளாக்குளம் கிராமத்தில் நிறைகுளத்து அய்யனார் கோயில் செவ்வாய் சாற்றுதல், குதிரை எடுப்பு விழா 2 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை துவங்கியதை முன்னிட்டு கிராம மக்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். இன்று செவ்வாய் சாற்றுதல் மற்றும் குதிரை எடுப்பு திருவிழாவை முன்னிட்டு கிராமத்தில் இருந்து கரகாட்டம்,மேள தாளங்களுடன் ஊர்வலமாக மானாமதுரையில் உள்ள குலாலர் தெருவில் குதிரைகள் செய்யும் இடத்திற்கு வந்தனர். பின்னர் மாலை 4:00 மணிக்கு குதிரைகளுக்கும் சுவாமி உருவங்களுக்கும் கிடாய் வெட்டி சிறப்பு பூஜை, அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்ற பிறகு ஆயிரக்கணக்கான கிராம மக்கள் குதிரைகளையும், மாடுகளையும்,சுவாமி உருவங்களையும், ஏராளமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி குழந்தை பொம்மைகளையும் தலைச்சுமையாக நீண்ட தூரம் உள்ள விளாக்குளம் கிராமத்திற்கு சென்று அங்குள்ள நிறைகுளத்து அய்யனார் கோயில் முன்பாக இறக்கி வைத்த பின்னர் தீபாராதனை,அபிஷேக,ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றது. இரவு கலை நிகழ்ச்சிகளும்,அன்னதானமும் நடந்தது. விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி, வடமாடு மஞ்சுவிரட்டு, கபடி போட்டி உள்ளிட்ட ஏராளமான போட்டிகள் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !