கொளஞ்சியப்பர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரம்; பக்தர்கள் மகிழ்ச்சி
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் தெற்கு, மேற்கு என புதிதாக ராஜகோபுரங்களுடன் கும்பாபிேஷக திருப்பணி தீவிரமாக நடந்து வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரில் சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், பிராது கட்டி வேண்டினால், 3வது நாள் அல்லது 3வது வாரம் அல்லது 3 வது மாதத்தில் பக்தர்களின் கோரிக்கை நிறைவேறும் என்பது ஐதீகம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அப்போதைய பெப்சி சி.இ.ஓ.,வின் வேண்டுதல் நிறைவேறியதும் சுவாமிக்கு, 1 கோடி மதிப்பிலான தங்க கிரீடம் காணிக்கையாக வழங்கினார். முன்னாள் முதல்வர் ஜெ., பெங்களூரு சிறையில் இருந்த போது முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஜாமின் வேண்டி பிராது கட்டியதும் 3 வது நாளில் ஜாமின் கிடைத்தது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டி, அவரது மனைவி துர்கா, பிராது கட்டினார். பின், ஸ்டாலின் முதல்வரானதும், நேர்த்திக்கடன் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இதுபோல் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பொது மக்கள் பலரும் பிராது கட்டி வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.
‘தினமலர்’ ஆன்மிகம் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறையின் வெப்சைட்டுகளை பார்த்து கனடா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகள் மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உட்பட பிற மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அடிப்படை வசதிகள் இல்லை இந்நிலையில், வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கு அடிப்படை வசதிகளை அறநிலையத்துறை செய்து தரவில்லை. குளியலறை, கழிவறை, முடி காணிக்கை செலுத்துமிடம், திருமண மண்டபம் என பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இதனால், பக்தர்கள் பலமடங்கு கட்டணம் செலுத்தி தனியார் விடுதிகளில் தங்கும் அவலம் தொடர்கிறது. இதனை சுட்டிக்காட்டி, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதும், பழுதடைந்த திருமண மண்டபத்தை சீரமைத்திட, அறநிலையத்துறை சார்பில், 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன. அதுபோல், பழுதான கழிவறை, குளியலறையை நடிகை நளினி ராமராஜன் சகோதரர் கார்த்திகேயன் சார்பில், 26 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கப்படுகிறது. தொல்லியல் குழு ஆய்வு கோவிலில் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகள் அருள்பாலிக்கும் பிரகாரத்திற்கு பின்பகுதியில் இரண்டாவது பிரகாரம் கட்ட அறநிலையத்துறை அனுமதி அளித்த நிலையில், மூன்றாவது பிரகாரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, ஓராண்டுக்கு முன், தொல்லியல்துறை வல்லுனர் இளஞ்செழியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தி, அனுமதியும் வழங்கியது.
ரூ.10 கோடியில் திருப்பணி இக்கோவிலில் புதிதாக தெற்கு, மேற்கு என புதிதாக ராஜகோபுரங்கள் கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது. அதுபோல், கிழக்கு, வடக்கு கோபுரங்கள் புதுப்பிக்கப்படுகிறது. உற்சவ மண்டபம், கண்ணாடி அரை மண்டபம், முனீஸ்வரர் சுவாமி மண்டபம், வடக்கு கோபுரம் முதல் சன்னதி வரை மண்டபம், மகா மண்டபம், புலவர் சன்னதி புனரமைப்பு மற்றும் இரண்டாம் பிரகாரம், 20 ஆயிரம் சதுர அடியில் கருங்கல் தரைத்தளம், இடும்பன் கடம்பன் புதிய முன் மண்டபம், கருவறை புதுப்பிப்பு என திருப்பணி கமிட்டி மூலம் உத்தேசமாக, 10 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு, பக்தர்கள் பங்களிப்புடன் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1.30 கோடி ரூபாய் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
பக்தர்கள் எதிர்பார்ப்பு; திருப்பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பெருநகரங்களில் உள்ள கோவில்களை போல நவீன தங்கும் விடுதிகள், குளியலறை, கழிவறை, கலையரங்கம், முடிகாணிக்கை செலுத்துமிடம், உயர்மின் கோபுரங்கள் போன்ற வசதிகள் செய்துதர வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க., அரசு பக்தர்களின் வசதிகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் 2027ல் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு கும்பாபிேஷகம் நடத்திட தீர்மானித்து, திருப்பணி தீவிரமாக நடக்கிறது. கோவிலுக்கு கும்பாபிேஷகம் நடப்பதுடன், அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டு வருவதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.