குதிரை வாகனத்தில் எழுந்தருளி விஸ்வேஸ்வர சுவாமி திருவீதியுலா
திருப்பூர்: நல்லுார் தேர்த்திருவிழாவின், 8வது நாளான நேற்று, நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி, குதிரை வாகனத்தி ல் சென்ற பரிவேட்டை நிகழ்ச்சி நடை பெற்றது.
நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் தேரோட்டம் விமரிசையாக நடந்தது; பல்வேறு கலைக்குழுக்களின் கலை நிகழ்ச்சி, சிவனடியார்களின் கைலாய வாத்தியம் என, கோலாகலமாக தேரோட்டம் நடைபெற்றது. தேரில் எழுந்தருளிய உற்சவமூர்த்திகள், வண்டித்தாரை பார்த்த பிறகு, கோவிலுக்கு திரும்பினர்.
இந்நிலையில், நேற்று மாலை பரிவேட்டை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, விஸ்வேஸ்வர சுவாமி, பரிவேட்டைக்கு வில் மற்றும் அம்பு சகிதமாக குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினார். தேர்வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார்.
நல்லுார், விஜயாபுரம், ராக்கியாபாளையம், கணபதிபாளையம், பள்ளக்காட்டுப்புதுார், அத்திமரத்துப்புதுார், மணியகாரன்பாளையம், காசிபாளையம் ஊர்பொதுமக்கள் சார்பில், பரிவேட்டை பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோவில் முன் அமைக்கப்பட்ட கலையரங்கில், கவிநயா நாட்டியாலயா சார்பில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நாட்டிய நாடகம் நடைபெற்றது.