தங்கம் விலை உயர்ந்தாலும் கோயிலுக்கு செலுத்தும் நேர்த்திக்கடன் குறையல..!
திருவாடானை: தங்கம் விலை உயர்ந்தாலும் கோயிலுக்கு செலுத்தும் நேர்த்திக்கடன் குறையவில்லை.தங்கம், வெள்ளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பக்தர்கள் கோயிலுக்கு செலுத்த வேண்டிய தங்கம், வெள்ளியை தயங்காமல் செலுத்தி வருகின்றனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இங்கு பக்தர்கள் தங்கம், வெள்ளி நகையை நேர்த்திக் கடனாக செலுத்துவது வழக்கம். நேற்று உண்டியலை திறந்த போது கடந்த முறையை விட அதிகளவில் தங்கம், வெள்ளி இருந்தது. இது குறித்து தேவஸ்தான அலுவலர்கள் கூறியதாவது: தங்கம், வெள்ளி விலை அதிகமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன் செலுத்துவதில் தொய்வு காட்டவில்லை. நேற்று முன்தினம் உண்டியல்களை திறந்த போது கடந்த முறையை விட இந்த முறை அதிகளவில் தங்கம், வெள்ளி எடை அதிகமாக இருந்தது என்றனர்.