இன்று ஆனி அமாவாசை விரதம்; வளமான வாழ்விற்கு முன்னோரை வழிபடுங்க!
ஆனி அமாவாசை முன்னோர்கள் வழிபாட்டிற்கு மிக முக்கியமாக நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல் சிறப்பு. பெற்றோர்கள் வாழும் காலத்தில், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வது போல, அவர்களின் வாழ்க்கைக்கு பிறகும் நன்றிக்கடனை தொடர வேண்டும் என்கிறது சாஸ்திரம். அதற்காக, பிதுர்கடனை ஏற்படுத்தி வைத்து உள்ளனர். ஆனி அமாவாசை அன்று, முக்கிய புனித தலங்களில் மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவர். இந்த நாளில் தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும்; பித்ருக்களின் தோஷம் அகலும் என்பது ஐதீகம். வீட்டில் குல தெய்வம், முன்னோர்களின் படங்களுக்கு மலர்கள் சாற்றி, தீப தூபம் காட்டி வழிபட வேண்டும். முன்னோர்களுக்குப் படைத்த உணவை காகத்திற்கு வைத்து பிறகே, உணவருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இன்று முன்னோரை வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம், பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுப்பது குடும்ப மகிழ்ச்சி தரும்.