மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திட்டமிட்டபடி செப்., 17ல் கும்பாபிஷேகம்
மதுரை; மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் செப்., 17ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோயில் நிர்வாகம் இத்தகவலை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
கோயில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2009 ஏப்.,8 ம் தேதி நடந்தது. அடுத்த 12 ஆண்டுகளில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 2018 பிப்.,2ல் கோயிலின் வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மண்டபம் சீரமைப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கும்பாபிஷேகம் தள்ளிப்போனது. கோயில் நிதி ரூ.15.81 கோடி மற்றும் உபயதாரர் நிதி ரூ.5.16 கோடி என மொத்தம் ரூ.32.28 கோடியில் 186 திருப்பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில்
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உலகப் புகழ் பெற்றது. இந்தக் கோயிலில் வழிபடுவதற்காக தினமும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், அதன் துணைக் கோயில்களுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. இந்தச் சொத்துகளை சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இவற்றை மீட்கக் கோரி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளை மீட்க உத்தரவிட வேண்டும். மேலும், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்கு ஏதுவாக சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை விரைந்து முடித்து குடமுழுக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கூறியுருந்தார்.
இந்த மனு இன்று உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவா் கோயில் பகுதியில் ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவில்லை. தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் வசூலிக்க வேண்டிய தொகை வசூலிக்கப்படாமல் உள்ளது என்றாா்.
தொடர்ந்து கோயில் நிா்வாகம் தரப்பில் வழக்கறிஞர் வைத்த வாதத்தில்.. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உள்ள வீரவசந்தராயா் மண்டப சீரமைப்புப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. புதிய நவீன சமையலறை அமைப்பதற்கான பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வருகிற செப்டம்பா் 1ம் தேதிக்குள் பணிகள் நிறைவடைந்துவிடும். இதைத் தொடா்ந்து, கோயிலின் குடமுழுக்கை செப்.,17ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது என்றாா். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை வரும் 29ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.