அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் துணை ஜனாதிபதி சுவாமி தரிசனம்
அவிநாசி: ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழாவையொட்டி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் துணை ஜனாதிபதி ராதா கிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார்.
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையான திருத்தலமான ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று ‘தம்பிரான் தோழர்’ என போற்றப்படும், ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நடந்தது. இதையொட்டி, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அவிநாசி கோவிலுக்கு நேற்று மாலை, 5:30 மணிக்கு வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோவில் சிவாச்சாரியார்கள் பரிவட்டம் கட்டினர். தொடர்ந்து மூலவர், அம்மன் சன்னதி, சுப்பிரமணியர் மற்றும் பைரவர் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்து பிரகாரம் சுற்றி வந்தார். அதன்பின், மங்கலம் ரோட்டில் முதலையுண்ட பாலகனை மீட்டெடுத்த சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் திருப்பணிகளில் கல்கார வரிசை முதலாவதாக சித்ரவன வரிசைக்கல் துவக்க விழா நடைபெற்றதை பார்வையிட்டு, கட்டுமான பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரும் பங்கேற்றார்.
‘காப்பாற்றிய பெரியவர்’ துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவில். சிறுவயதில் இந்த கோவிலில் குருபூஜைக்கு வந்தபோது இங்குள்ள தாமரைக்குளத்தில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கினேன். மூன்று முறை தண்ணீரிலிருந்து வெளியில் வந்தபோது, அங்கிருந்த ஒரு பெரியவர் என்னை கை கொடுத்து காப்பாற்றினார். அவரை சுந்தரமூர்த்தி நாயனராக நான் உணர்ந்ததால், அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை தினத்தன்று அவிநாசிக்கு வந்து வழிபடுவதை தொடர்ந்து வழக்கமாக வைத்துள்ளேன்,’’ என்றார். சுவாமி தரிசனத்துக்கு பின், துணை ஜனாதிபதி திருப்பூருக்கு சென்றார்.
வருந்தத்தக்க நிகழ்வு; டில்லியில் நடந்த போராட்டம் குறித்து துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘ஒரு என்.ஆர்.ஐ., திடீர் ஞானோதயம் வந்ததைப் போல ஒன்றைச் சொல்கிறார். அவர் பின் அனைத்து அரசியல் கட்சிகளும் செல்வது போல், தோற்றம் ஏற்படுத்துவது மிகவும் வருந்தத்தக்கது. இதை பற்றி நான் சொல்ல ஒன்றும் இல்லை. அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியலை முன் நின்று நடத்த வேண்டும். மக்களின் உணர்வுகளைப் புரிந்து நடக்க வேண்டும்,’’ என்றார்.