பழநி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; வாலிபர் கைது
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு போலீஸ் அவசர எண் 100க்கு போன் செய்து மிரட்டல் தகவல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பழநி கோயிலுக்கு நேற்று முன்தினம் வருகை புரிந்த நபர் சுவாமி தரிசனம் செய்து, அன்னதானம் சாப்பிட்டபின் அடிவாரம், கிரிவீதி, பாத விநாயகர் கோயில் அருகே வந்துள்ளார். நேற்று இரவு முதல் போலீஸ் அவசர எண் 100க்கு தொடர்ந்து அழைத்து தொல்லை கொடுத்துள்ளார். இன்று காலை போலீஸ் அவசர எண் 100க்கு தொடர்பு கொண்ட நபர், பழநி கிரிவிதி பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் அளித்தார். உடனடியாக சுதாரித்த போலீசார் திண்டுக்கல், பழநி வெடிகுண்டு நிபுணர்கள், வெடிகுண்டு மோப்பநாய் அபி உடன் கோயிலில் முக்கிய பகுதிகளான வின்ச், ரோப் கார் ஸ்டேஷன், கிரி விதி, கோயில் தலைமை அலுவலகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஆய்வு செய்தனர். மேலும் பழநி ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் வெடிகுண்டு சோதனை நடந்தது. இதே சமயத்தில் மர்ம நபர் ரயில் மூலம் திண்டுக்கல் நோக்கி செல்வது அறிந்த போலீசார் அவரை பின்தொடர்ந்து திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் பிடித்து விசாரித்தனர். அதில் தர்மபுரி மாவட்டம், நல்லாம்பாளையம்புதூரை சேர்ந்த மாது மகன் முனியப்பன் 25, என தெரிந்தது. இந்த நபர் மீது ஏற்கனவே பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் கோயிலில் தரிசனம் முடித்த பிறகு போலீசாருக்கு வெடிகுண்டு இருப்பதாக பீதியை ஏற்படுத்திய முனியப்பனை அடிவாரம் போலீசார் கைது செய்துள்ளனர். ஆடி கார்த்திகை தினத்தை முன்னிட்டு வெடிகுண்டு தகவல் பரவியதை அடுத்து போலீசார், பக்தர்கள் பரபரப்பு அடைந்தனர்.