சென்னை கோவில்களில் ஆடி கிருத்திகை விழா; வடபழனியில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
சென்னை, புறநகரில் உள்ள முருகப் பெருமான் கோவில்களில் ஆடி கிருத்திகை விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வேண்டுதல் நிறைவேற்றினர்.
சூரனை அழித்து, தேவர்களைக் காத்த; ஆறுமுக பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைப் போற்றும் விதமாக, கிருத்திகை விரத நாள் கடைப்பிடிக்கப் படுகிறது.
முருகப்பெருமானுக்கான பிரதான விழாவாக கருதப்படும் ஆடி கிருத்திகை விழா சென்னை, புறநகரில் உள்ள முருகன் கோவில்களில் விமர்சையாக விழா எடுக்கப்படுகிறது.
வடபழனி முருகன் கோவில்: வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3:30 மணிக்கு பள்ளியெழுச்சி பூஜைகள் நடந்தன. காலை 5:00 மணி முதல் நண்பகல், 12:00 மணிவரை சந்தன காப்பு அலங்காரமும்; உச்சிகால அபிஷேகம் முடிந்ததும், பிற்பகல், 1:00 மணி முதல் மாலை,4:00 மணிவரை ராஜ அலங்காரமும் மூலவருக்கு செய்யப்பட்டிருந்தது. சாயரக்ஷை பூஜை, அபிஷேகம் முடிந்ததும், மாலை 5:00 மணி முதல் இரவு, 11:00 மணிவரை புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை ஐந்து மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவியத்தொடங்கினர். முதியோர், கர்ப்பிணி பெண்கள், மாற்று திறனாளிகளுக்கு தனி வழித்தடம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து, பால்குடம் ஏந்தி, அலகு குத்தி பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றினர். அவர்களுக்கும் தனி வழித்தடம் அமைக்கப்பட்டிருந்தது. இரவு வள்ளி,தேவசேனா சமேதராக சுப்பிரமணிய சுவாமி மயில் வாகத்தின் மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
அதேபோல, பிராட்வே கந்தக்கோட்டம், வானகரம், மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் கோவில், பெசன்ட்நகர் அறுபடைவீடு முருகன், குரோம்பேட்டை குமரன் குன்று, குன்றத்துார் முருகன் ஆகிய கோவில்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன. -நமது நிருபர்-