பரமக்குடி சாத்தாயி அம்மன் 34 வது ஆண்டு ஆவணி திருவிழா; ஆக., 18 பாலாபிஷேகம்
பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள சாத்தாயி அம்மன் கோயிலில் 34வது ஆண்டு ஆவணி திருவிழா துவங்கியது.
கோயிலில் ஆக., 9 காலை கணபதி ஹோமம் நடந்து, இரவு 7:00 மணிக்கு அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாளை மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்க உள்ளது. தினமும் அம்மன் மீனாட்சி, காமாட்சி, குமரி, சரஸ்வதி, மகாலட்சுமி, சிவ பூஜை அலங்காரங்களில் அருள்பாலிக்க உள்ளார். ஆக., 17 மாலை முளைப்பாரி ஊர்வலம் நடக்க உள்ளது. தொடர்ந்து மறுநாள் காலை 7:00 மணி தொடங்கி காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்துவர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடக்கிறது. இதனை ஒட்டி தினமும் அம்மனுக்கு காலை 10:00 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது. மேலும் மாதர் கோஷ்டியார்களின் திவ்ய நாம பஜனை தினசரி நடந்து வருகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.