‘ஏலே’ ஆண்டாளு!
திருநெல்வேலி மாவட்டத்தில் செல்லமாகவும், கோபமாகவும் பயன்படுத்தப்படும் வார்த்தை ‘ஏலே’. ஸ்ரீவில்லிப்புத்துார் ஒரு காலத்தில் திருநெல்வேலியை சார்ந்தே இருந்தது. இதன் காரணமாக ‘ஏலே’ என்ற வார்த்தை இங்கும் பயன்படுத்தப்பட்டது.
ஆண்டாள் காலத்தில் இந்த வார்த்தை ‘எல்லே’ என்று இருந்ததாம். திருப்பாவையில் ‘எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ’ என தோழியைப் பார்த்து கேட்கிறாள் ஆண்டாள்.‘எல்லே’ என்ற செய்யுள் வார்த்தையே திரிந்து ‘ஏலே’ என்று ஆனதாகச் சொல்வர். குழந்தைகள் ஆணாயினும், பெண்ணாயினும் ‘ஏலே’ என செல்லமாக அழைப்பர். பெரியவர்களிடையே சண்டை வந்து விட்டால், வயது வித்தியாசம் பாராமல் கோபத்தில், ‘ஏலே! உன்னை கவனிச்சுகிறேமுலே’ என்று சொல்வது நெல்லை மக்களின் வழக்கம்.
ஆண்டாளின் துாதன் கிளி
கிளி சொன்னதைச் சொல்லும் தன்மையுடையது. ஆண்டாள், கண்ணனை மணக்க விரும்பிய தகவலை சொல்வதற்காக கிளியை துாது அனுப்பினாளாம். ஆகவே, ஆண்டாள் திருமணத்திற்கு உதவியதற்கு மரியாதை செய்யும்விதமாக கிளியை தன் இடக்கையில் வைத்திருக்கிறாள். வியாசரின் மகனாகிய, சுகப்பிரம்ம ரிஷியே ஆண்டாள் கையில் கிளியாக இருப்பதாகவும் சொல்வதுண்டு.
இத்தலத்தில் ஆண்டாள் கையில் வைப்பதற்காக தினமும் இலைகளால் கிளி செய்யப்படுகிறது. மாலையில் சாயரட்சை பூஜையின்போது இந்த கிளி ஆண்டாளுக்கு வைக்கப்படுகிறது. ஆண்டாள் மறுநாள் காலை வரையில் கையில் கிளியுடன் இருக்கிறாள். பின், இந்த கிளி பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதனை மரவள்ளிக்கிழங்கு இலையை உடல் பகுதியாகவும், மாதுளம் பிஞ்சினை அலகு, இலையை இறகு, காக்காப்பொன் கண்ணாகவும் வைத்து, வாழை நாரில் இணைத்து செய்யப்படுகிறது.