புதுச்சேரியில் ஜோதிர்லிங்க தரிசனம் ஏராளமான பக்தர்கள் வழிபாடு
புதுச்சேரியில் நடக்கும் 12 ஜோதிர்லிங்க தரிசன நிகழ்ச்சியில், இரண்டாம் நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
திருச்சி சீராத்தோப்பில், ஜோதிர்லிங்க கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில், பக்தர்கள் தங்கள் கைகளால், சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, பிரதிஷ்டை செய்யப்பட உள்ள 12 ஜோதிர்லிங்கங்களும் பொதுமக்கள் தங்கள் கைகளால், அபிஷேகம் செய்து வழிபடும் வகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் (14ம் தேதி) துவங்கி, இன்று (16ம் தேதி) வரை 12 ஜோதிர்லிங்கங்களுக்கும், லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள விவேகானந்தா பள்ளி வளாகத்தில், அபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அபிஷேக நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று மாலை 5:00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி திருமங்கலம், சிதம்பரேஸ்வரர் திருமடத்தை சேர்ந்த திருக்கயிலாய ஸ்ரீகந்த பரம்பரையின் ஸ்ரீகணேச தேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.
பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், முன்னாள் சபாநாயகர் செல்வம் ஆகியோர் ஜோதிர்லிங்கங்களுக்கு அபிஷேகம், சிவபுராண பாராயணம் செய்தனர்.
இன்று (16ம் தேதி) கவர்னர் கைலாஷ்நாதன் ஜோதிர்லிங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபட உள்ளார். இந்து முன்ணணி கோட்ட செயலாளர் முருகையன், மாநில தலைவர் சனில்குமார், மாநில செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அனைத்து சிவனடியார்கள் செய்துள்ளனர்.