அன்னூர் கருப்பராயன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்
அன்னூர்: கருப்பராயன் சாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது.
அன்னூர், சிறுமுகை சாலையில், கலாமணி நகரில் உள்ள ஸ்ரீ கருப்பராயன் கோவிலில், புதிதாக வள்ளி தெய்வானை சமேதர ஆறுமுக சுப்பிரமணியசாமி, வராஹி அம்மன், கரிய காளியம்மன், சரஸ்வதி, பண்ணாரியம்மன், நவகிரகங்கள், ஆகாசபைரவர் ஆகிய தெய்வங்கள் நிறுவப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. செந்தில் முருகன் சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. முகூர்த்தக்கால் நடுதலும், முளைப்பாலிகை இடுதலும் நேற்று நடந்தது. கலாமணி சாமி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வருகிற 25ம் தேதி காலை விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், கங்கணம் கட்டுதல் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. மாலை 6:00 மணிக்கு முதற்கால வேள்வி பூஜை நடைபெறுகிறது. வருகிற 26ம் தேதி அதிகாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜை நடக்கிறது. காலை 5:00 மணிக்கு அனைத்து தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 8:00 மணிக்கு அபிஷேக ஆராதனையும், இதையடுத்து தச தரிசனமும் அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.