வல்லக்கோட்டை முருகன் கோவிலில் சத்ரு சங்கார திரிசதீ யாகம்
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், ஆவணி மாத சஷ்டி செவ்வாய்க்கிழமையையொட்டி, சத்ரு சங்கார திரிசதீ யாகம் நேற்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவிலில், 7 அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், ஆவணி மாத முதல் செவ்வாய்க்கிழமையான நேற்று, மூலவருக்கு பால், தயிர், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மஞ்சள் மலர் அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார். அதேபோல, உற்சவர் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு மந்திர புஷ்ப பூஜை மேற்கொள்ளப்பட்டது. காலை 9:00 மணிக்கு சஷ்டி மண்டபத்தில் முருகன் முன் சத்ரு சங்கார திரிசதீ யாகம் நடந்தது.
ஆறு அர்ச்சகர்கள் சத்ரு சங்கார திரிசதீ மந்திரங்கள் சொல்லி யாக பூஜை மேற்கொண்டனர். தடைகளை அகற்றி வாழ்வில் ஏற்றம் தர வேண்டும் என நினைத்து இந்த யாகம் செய்தனர். யாகம் நிறைவடைந்தவுடன் பூஜிக்கப்பட்ட கலச தீர்த்தங்களால் முருகனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் முருகன் எழுந்தருளினார். அர்ச்சகர்கள் ஆறு தட்டுகளில் மலர்களை ஏந்தி, சத்ரு சங்கார திரிசதீ மந்திரங்கள் கூறி சிறப்பு அர்ச்சனை செய்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகனை வழிபட்டனர். முருகனுக்கு உகந்த சஷ்டியும் செவ்வாய்க்கிழமையும் ஒருங்கே வந்தமையால் திரளான பக்தர்கள் வந்து ஒரு மணி நேரம் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.