குமரன் குன்று சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 27ல் கும்பாபிஷேகம்
மேட்டுப்பாளையம்: குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசுவாமி கோவிலில், திருப்பணிகள் முடிந்த நிலையில், வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
மேட்டுப்பாளையம் -– அன்னுார் சாலையில், குமரன் குன்றில், மிகவும் பழமை வாய்ந்த கல்யாண சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, திருப்பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து திருப்பணி தலைவர் பழனிசாமி, அறங்காவலர் குழு தலைவர் செல்வகுமார், அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், பழனிசாமி, சரோஜினி, ராமச்சந்திரன், செயல் அலுவலர் சபரீஸ்வரி ஆகியோர் கூறியதாவது: புதிதாக முன் மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. சுற்றுப்பிரகார மண்டபங்கள், விமானங்கள், கருவறைகள் ஆகியவற்றை புதுப்பித்து வர்ணங்கள் தீட்டப்படுள்ளன. திருப்பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளன.கும்பாபிஷேக விழா 25ம் தேதி பிள்ளையார் வழிபாட்டுடன் முதல் கால வேள்வி பூஜையுடன் துவங்குகிறது. இதற்காக, 60 அடி நீளம், 40 அடி அகலத்தில், பெரிய யாகசாலை அமைக்கப்பட்டு வருகிறது.
யாக சாலையை சுற்றி பக்தர்கள் வர, 5 அடிக்கு சுற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலையின் உள்ளே பஞ்சாக்ஷல வேதிகை, ஸ்ரீ சக்கரா வேதிகை, பத்மவேதிகை, ஆறு பரிவார் மேடைகள், 21 யாககுண்டங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. வேலாயுதம், உத்திராபதி ஆகியோர் தலைமையில், 20 பேர் யாக சாலை அமைக்கும் பணிகளிலும், அலங்கார வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 26ம் தேதி காலை விமானங்களில் கலசம் நிறுவும் பணிகளும், அதைத் தொடர்ந்து இரண்டாம் கால வேள்வி பூஜையும், மதியம் தெய்வ திருமேனிகளுக்கு எண் வகை மருந்து சாற்றுதலும், மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜையும் நடக்கிறது. 27ம் தேதி காலை, நான்காம் கால வேள்வி பூஜையும் நடக்கிறது. காலை 8:30 மணிக்கு யாகசாலையிலிருந்து தீர்த்த குடங்கள் கோவிலை சுற்றி வலம் வந்து, விமான கலசங்களுக்கும், மூலவருக்கும், பரிவார் தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. கோவை பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்த உள்ளனர். விழா ஏற்பாடுகளை, திருப்பணி குழுவினர் மற்றும் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் கந்தசாமி ஆகியோர் செய்து வருகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.