விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் ‘சிக்ஸ் பேக்’ சுவாமி சிலைகள்
மறைமலை நகர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புறநகர் பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் பகுதிகளில் மக்களை கவரும் வகையில் 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செய்யும் பணி விறு விறுப்புடன் நடந்து வருகிறது.
நாடு முழுதும் செப்., மாதம் 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலை தயாரித்து, வண்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் சிலைகள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தோர் முன்பதிவு செய்து எடுத்து செல்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் ‘சிக்ஸ் பேக்’ விநாயகர், ஸ்பைடர் மேன் விநாயகர், மூன்று முக விநாயகர், நரசிம்ம விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், சயண விநாயகர், கற்பக விநாயகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஏகாம்பரம் என்பவர் கூறியதாவது: கிழங்கு மாவு, பேப்பர் மாவு ஜவ்வரிசி, சுண்ணாம்பு கல் உள்ளிட்ட பொருட்களுடன் களிமண்ணை சேர்த்து சிலைகள் செய்து வருகிறோம். இயற்கை மூல பொருட்களால் செய்யப்படும் சிலைகள் என்பதால், நீர்நிலைகளில் கரைக்கும் போது தண்ணீர் மாசு அடையாது. கடந்த 17 ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான சிலைகள் செய்து உள்ளோம். ஒரு அடி முதல் 13 அடி உயரம் வரை சிலைகள் செய்யப்பட்டுள்ளன. சிலைகளின் வடிவத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 4,000 ரூபாயில் இருந்து 50,000 ரூபாய் வரை சிலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக மூல பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், சிலைகளின் விலையும் உயர்ந்துள்ளன. இந்த ஆண்டு தமிழகம் முழுதும் உள்ள நீர்நிலைகளில் களிமண் எடுக்க வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் கனிமவளத்துறை அனுமதி அளிப்பதில்லை. கடந்த காலங்களில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இதுபோன்ற இடையூறு ஏற்படவில்லை. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க., அரசு கடப்பாரை, மண்வெட்டி கொண்டு களிமண் எடுக்க அனுமதி மறுத்துள்ளது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசு களிமண் எடுக்க உரிய அனுமதி மற்றும் எளிய நடைமுறையை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.