ரூ. 83 கோடியில் ராமேஸ்வரத்தில் 108 அடி அனுமான் சிலை : பிப்.,யில் திறப்பு விழா
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ரூ. 83 கோடியில் 108 அடி உயரத்தில் அனுமான் சிலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது. பிப்., திறப்பு விழா நடக்க உள்ளதால், பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளது.
குஜராத் ஹரிஷ் ஜந்தர் நந்தா கல்வி அறக்கட்டளை சார்பில் 2022ல் ராமேஸ்வரம் ஓலைக்குடா கடற்கரை அருகில் ரூ. 83 கோடி செலவில் 108 அடி உயரத்தில் அனுமான் சிலை அமைக்க கட்டுமான பணி துவங்கியது. நிலப்பரப்பில் இருந்து 20 அடி ஆழத்தில் குழிதோண்டி அடித்தளத்துடன் துவங்கிய கட்டுமான பணி, தற்போது அனுமான் சிலை வடிவமைப்பு 90 சதவீதம் பணிகள் முடிந்தது. இன்னும் சில மாதத்தில் 100 சதவீதம் பணிகள் முடிந்து சிலை முழுமை பெற உள்ளது. இக்கட்டுமான பணியில் தமிழக, குஜராத் கட்டட பொறியாளர்கள் ஆலோசனையில் இரு மாநில கட்டுமான தொழிலாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அகில பாரத தீர்த்த புரோகிதர்கள் மகாசபை இளைஞரணி தலைவர் எம்.அரவிந்த் கூறுகையில் : குஜராத் அறக்கட்டளை சார்பில் குஜராத், சிம்லாவில் 108 அடி அனுமான் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் இங்கு கட்டும் சிலையும் பிப்.,க்குள் முடிவடைந்து திறப்பு விழா நடக்க உள்ளது. தென் மாநிலத்தில் முதன்முதலாக 108 அடி உயர அனுமான் சிலை அமைவது ராமேஸ்வரத்தில் தான். இந்த சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளது என்றார்.