வைகாசி விசாகத்தின் சிறப்பு
விசாகம் என்றால் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கிணைந்து இருப்பதால், ஆறுமுகங்களுடன் முருகன் தோன்றியதாக ஐதீகம். தமிழர்களுக்கு முக்கியமான தெய்வமான முருகனின் அவதார தினம் என்பதால், வைகாசி விசாகம் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான நாளாகும். பங்குனி மாதத்தின் உத்திரம் போல, தை மாதம் பூசம் போல, கார்த்திகை மாதத்தின் கார்த்திகை போல, வைகாசி மாதத்தில் விசாகம், முருக கடவுளுக்கு உகந்த அற்புதமான நாள். வீட்டில் கந்த வழிபாடு செய்வது, ரொம்பவும் விசேஷம். இந்த நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து வீட்டை சுத்தமாக்கி, பூஜை அறையை சுத்தம் செய்து, கோலமிட வேண்டும். விளக்குகளுக்கு சந்தனம், குங்குமம் மிட்டு, விளக்கேற்ற வேண்டும். முருகப்பெருமானுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. அரளி, செம்பருத்தி ஆகிய மலர்களைக் கொண்டு வேலவனை அலங்கரிக்கலாம். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம். முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழா தான், வளர்ச்சியை கொடுக்கும் விழாவாக அமைகின்றது.
விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால், வெற்றி கிட்டும். வேலவன் அருளால் விரும்பியது நடக்கும். எனவே தான் திருச்செந்தூர் முதல் தேசமெங்கும் முழுவதும், முருகனது ஆலயங்களில் இந்த விழாவை, சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறார்கள். விசாக நாளில் வேலவனின் சன்னதி சென்று வழிபட்டால், வேண்டிய வரம் கிடைக்கும்.