உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொம்மையார்பாளையம் ஆதீன மடத்தில் கும்பாபிஷேகம்

பொம்மையார்பாளையம் ஆதீன மடத்தில் கும்பாபிஷேகம்

மரக்காணம்: பொம்மபுர ஆதீன மடத்தில் நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் அருகே உள்ள பொம்மையார்பாளையத்தில் திருக்கயிலாய பரம்பரை மயிலம் பொம்மபுர ஆதீனம் அமைந்துள்ளது.

இந்த ஆதீனத்திற்கு உட்பட்ட ஸ்ரீ மத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடவளாகத்தில் உள்ள கோவில் மற்றும் குரு மகா சன்னிதானங்களில் சிவயோக சமாதிகள் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டன.

புதுப்பிக்கப்பட்ட கோவில் மற்றும் சிவயோக சமாதிகளுக்கு நேற்று காலை, கும்பாபிஷேகம் நடந்தது.

அதிகாலை முதலே வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாக பூஜைகள் நடத்தினர்.

தொடர்ந்து காலை 8:30 மணி அளவில் கலசத்தில் இருந்த புனித நீரை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் ஸ்ரீ மத் சிவஞான பாலய சுவாமிகள் கோபுரங்கள் மற்றும் சிவயோக சமாதிகள் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.

இதில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., சிவக்குமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர் . மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

இதையொட்டி நல்லாற்றுார் சிவப்பிரகாசர் பாடியருளிய சிவ ஸ்ரீஞான பாலய தேசிகர் பிள்ளைத்தமிழ் நுால் வெளியிடப்பட்டது.

மயிலம் தமிழ் கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு எழுதிய அருஞ்சொற்பொருள், பதவுரை, தெளிவுரை மற்றும் விளக்கவுரையுடன் கூடிய பதிப்பு நுால்களும் வெளியிடப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் உத்தரவின் பேரில் ஆதீன பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !