விழுப்புரம் பெருமாள் கோவிலில் கிருஷ்ண லீலை உபன்யாசம்
விழுப்புரம்: விழுப்புரம் பெருமாள் கோவிலில், வேளுக்குடி ரங்கநாதனின், உபன்யாசம் நிறைவு நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் கிருஷ்ண லீலைகளின் ரகசியம் அறிவோம் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. நிகழ்ச்சியில், வேளுக்குடி ரங்கநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:
கண்ணன் அவதரித்த அன்றே மதுரையிலிருந்து கோகுலத்துக்குச் சென்றது கம்சனுக்கு பயந்து அல்ல, அங்கிருக்கும் இடையர்களுக்கு அருள் செய்து ஆனந்தமாக மாடுகளை மேய்ப்பதற்காக. சிறு வயதிலேயே பூதனை முதலான அரக்கர்களைக் கொன்று தான் சாதாரண மனிதக் குழந்தை அல்ல என்று காட்டினார். இந்த உலகம் அனைத்தும் தன்னுடைய சொத்துதான் என்று காட்ட எல்லா வீடுகளிலிருந்தும் வெண்ணையை திருடினார். அத்தோடு கோபிகைகளின் மனதையும் திருடினார். தான் எவ்வளவு உயர்ந்தவராய் இருந்தாலும் தன் அடியார்களுக்குத் தான் வசப்பட்டவனே என்று உணர்த்த யசோதை கையால் உரலோடு கட்டுப்பட்டார். அன்போடு அணுகினால் அந்தக் கண்ணனை நாம் புரிந்துகொள்ளலாம். கர்வத்தோடு அணுகினால் ஒருநாளும் அறியமுடியாது. இப்படி மேன்மை எளிமை என்ற இரண்டு பண்புகளையும் காட்டியதால் கண்ணனே நமக்கெல்லாம் தஞ்சம். அவரைச் சரணடைந்தவர்கள் ஒருநாளும் கெட்டுப்போவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.