உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக அதிசயம் பட்டியலில் தஞ்சை பெரிய கோவிலை கொண்டு வர வலுக்கும் கோரிக்கை

உலக அதிசயம் பட்டியலில் தஞ்சை பெரிய கோவிலை கொண்டு வர வலுக்கும் கோரிக்கை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவில், மாமன்னன் ராஜராஜ சோழனால், 1003-ம் ஆண்டு கட்ட தொடங்கி, 1010-ம் ஆண்டு கட்டுமானம் நிறைவு பெற்றது. அடுக்குமானம் என்ற முறையில் ஒரு கல்லுடன் மற்றொரு கல் என இணைப்பால், கட்டப்பட்டு, காலங்களைக் கடந்து நிற்கும் தமிழக கட்டுமானக் கலையின் உதாரணமாக விளங்கி வருகிறது.


சோழர் கால கட்டடக் கலைக்கு சிறந்து விளங்கி வரும் பெரியகோவிலை, உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது. இருப்பினும், பெரியகோவிலை உலக அதிசயப்பட்டியலில் கொண்டு வர வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து, தஞ்சாவூர் பெரிய கோவில் 8-வது உலக அதிசயம் என்ற குழு துவங்கப்பட்டு சில ஆண்டுகளாக பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர்.


இந்நிலையில், சட்ட சபையில், பைசா கோபுரம் சாய்ந்த இருக்கும் நிலையில், கம்பீரமாக பல ஆண்டுகளாக நிற்கும் பெரியகோவில் கோபுரம் தான் உலக அதியம் என, அமைச்சர் ராஜ்மோகன் பெருமையுடன் பேசினார். இதையடுத்து, பெரியகோவிலை உலக அதிசயப்பட்டியலில் இணைக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெறும் பேச்சுடன் நின்று விடாமல் முயற்சிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 


இது குறித்து, வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது: உலக அதிசயங்கள் பட்டியலில் ஒன்றாக இடம்பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் பெரிய கோவிலுக்கு உள்ளது. உலகிலேயே கருங்கற்களை மட்டுமே கொண்டு கட்டப்பட்ட மிக உயரமான கோவில் இது மட்டுமே. இக்கோவிலின்கட்டுமான நுட்பமான அடுக்குமானம் என்பது ஒரு அதியம் தான். கடந்த சில ஆண்டுகளாக, தஞ்சாவூரை சேர்ந்த பொறியாளர்கள், டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் பணியைத் துவங்கி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பெரியகோவிலை பெருமைப்படுத்தும் விதமாக பேசியதை வரவேற்கிறோம். அதே சமயம், அவர் வெறும் பேச்சுடன் நிறுத்தி விடாமல், மத்திய அரசின் கவனத்துக்கொண்டு சென்று, பெரியகோவிலை உலக அதியப்பட்டியலில் கொண்ட வர முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !