பழநி முருகன் கோயிலில் ஆவணி கார்த்திகை பூஜை; பக்தர்கள் தரிசனம்
பழநி: பழநி முருகன் கோயிலில் ஆவணி மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பழநி முருகன் கோயிலில் ஆவணி கார்த்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை, ஆறு கால பூஜை நடைபெற்றது. உள்ளூர்,வெளியூர், வெளி மாநில பக்தர்கள் படிப்பாதை, வின்ச் மூலம் கோயில் சென்றனர். ரோப்கார் பராமரிப்பு பணி காரணமாக செயல்படவில்லை. முருகன் கோயிலில் மாலை நேரத்தில் விளக்கு பூஜை திருக்கல்யாணம் மண்டபத்தில் நடந்தது. சாயரட்சை பூஜைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் சின்னகுமாரசுவாமி புறப்பாடு நடந்தது. வெளி பிரகாரத்தில் தங்கரத புறப்பாட்டில் சின்னகுமாரசுவாமி எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தங்கரத புறப்பாட்டில் பங்கேற்றனர். திருஆவினன்குடி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.