உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கோவில்களில் செவ்வாய் பிரதோஷ சிறப்பு வழிபாடு

திருப்போரூர் கோவில்களில் செவ்வாய் பிரதோஷ சிறப்பு வழிபாடு

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் முருகருக்கு உகந்த நாளான இன்று செவ்வாய் தரிசனமும் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடும் நடந்தது.


செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில், அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மற்றும் ஹிந்து பண்டிகை நாட்களில், சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இது தவிர, கந்தசஷ்டி, மாசி பிரம்மோத்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன. செவ்வாய் கிழமை கந்த பெருமானுக்கு உகந்த நாள் என்பதால்,கந்த பெருமானை தரிசிக்க ஏராளமானோர் திருப்போரூரில் திரள்கின்றனர். அந்த வகையில், இன்று செவ்வாய் கிழமை என்பதால் காலை முதலே பக்தர்கள் முருகரை தரிசித்து, நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். அதேபோல், ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி, கூட்டு வழிபாடு செய்தனர்.


பிரதோஷ வழிபாடு: திருப்போரூர் பிரணவமலையில், பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, பிரதோஷத்தையொட்டி, இன்று சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவர் கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்தார். அதேபோல், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய செங்கண்மால் கிராமத்தில் உள்ள செங்கண்மாலீஸ்வரர் கோவில், செம்பாக்கம் ஜம்புகேஸ்வரர் கோவில், மாம்பாக்கத்தில் உள்ள தெய்வநாயகி சமேத முருகநாதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !