உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வஞ்சிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் திருப்பணிகள் மீண்டும் தொடக்கம்

வஞ்சிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் திருப்பணிகள் மீண்டும் தொடக்கம்

பொன்னேரி: வஞ்சிவாக்கத்தில், கிடப்பில் போடப்பட்டிருந்த அகத்தீஸ்வர் கோவில் சீரமைப்பு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் கிராமத்தில், 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில் சுவர்களில் மரங்கள் வளர்ந்தும், விரிசல்கள் ஏற்பட்டும், கட்டுமானங்கள் இடிந்து விழும் நிலையில் இருந்தன.

பக்தர்களின் தொடர் கோரிக்கையின் பயனாக, கோவிலை இடித்து விட்டு,புதிதாக கட்ட 99 லட்சம் ரூபாயை ஹிந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கியது. இதற்காக, கடந்தாண்டு மார்ச் 31ல் பாலாலாயம் செய்யப்பட்டு, கோவில் சிலைகள் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டன.

அதை தொடர்ந்து, அங்கிருந்த சன்னிதிகளும், மடப்பள்ளியும் இடித்து அகற்றப்பட்டன. கோவில் வளாகம் முழுதும் இடிக்கப்பட்டு, ஓராண்டிற்கும் மேலாக சீரமைப்பு பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது. இது, பக்தர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, நம் நாளிதழில், கடந்த ஜூன் மாதம் செய்தி வெளியானது. பக்தர்களும், ஹிந்து சமய அறநிலைய துறையினரை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அதன் பயனாக, கடந்த வாரம் கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. தற்போது கோவிலின் மூலவர் சன்னிதிக்கான அடித்தளம் அமைத்து, அதில் மண் நிரப்பி பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து கட்டமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

ஏற்கனவே கோவில் இருந்த அமைப்பில் எந்தவொரு மாற்றமும் செய்யாமல், பணிகளை மேற்கொள்ளும்படி ஒப்பந்த நிறுவனத்திற்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தி உள்ளது.

அதற்கேற்ப சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கிடப்பில் போடப்பட்டிருந்த கோவில் சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெறுவதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !