போதை இல்லாத எதிர்காலம் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி அழைப்பு
பெங்களூரு: ‘‘அமைதியான, போதைப்பொருள் இல்லாத எதிர்காலத்தை உருவாக்க வாருங்கள்,’’ என, தமிழகத்தில் இருந்து வந்திருந்த இளம் தலைமுறையினரிடம், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி அழைப்பு விடுத்தார்.
தமிழகத்தை சேர்ந்த, 400 ‘ஜென் ஜி’ தலை முறையை சேர்ந்தவர்கள், பெங்களூரு கனகபுரா சாலையில் உள்ள வாழும் கலை மையத்திற்கு வந்தனர். அங்கு மையத்தின் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி முன்னிலையில், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
அப்போது, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி பேசியதாவது:
இளைஞர்கள் தான் நம் நாட்டை முன்னோக்கி வழிநடத்த வேண்டும். நீங்கள் சுமக்கும் கவலைகளையும், மனச்சுமைகளையும் இறக்கி வைத்து விட்டு, அதிக தெளிவுடனும், வலிமையுடனும், தங்கள் வாழ்க்கைக்கு திரும்புவதற்கு ஒரு இடமாக இந்த ஆசிரமத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
தமிழ் மொழி மற்றும் கலாசாரம் உலகளாவ பரந்து விரிந்துள்ளது. உலகில் உள்ள பிற மொழிகள், கலாசாரங்கள், வாய்ப்புகளுக்கு திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். அதே வேளையில், தங்கள் வேர்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
அமைதியான வாழ்க்கை வாழ்வது ஒரு நாகரீகம்; ஆன்மிக வாழ்க்கை வாழ்வது ஒரு நாகரீகமாகும். நம் வாழ்க்கையில் அன்றாட அழுத்தங்களுக்கு மத்தியில், புன்னகையையும், சமநிலையையும் பேணுவதற்கு, அகவலிமை தேவை.
நாம் அனைத்து விஷயங்களையும் முகத்தில் புன்னகையுடன் செய்ய வேண்டும். அதற்கு நமக்கு அகவலிமை தேவை. அந்த வலிமையை வளர்ப்பதற்கான வழிகளாக மூச்சு பயிற்சியும், தியானமும் தரும்.
நானும் அறிவியலை ஆதரிக்கிறேன். அறிவியலுக்கும், ஆன்மிகத்துக்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அப்படித்தான் எந்த முரண்பாடும் இல்லாமல், நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.