உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா; சிவாச்சாரியார்களுக்கு ஆச்சார்ய ஸ்நானம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா; சிவாச்சாரியார்களுக்கு ஆச்சார்ய ஸ்நானம்

மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில்  கும்பாபிஷேக விழாவின் ஒரு பகுதியாக, பூஜை நிகழ்வுகளை நடத்தவுள்ள சிவாச்சாரியார்களுக்கு ஆச்சார்ய ஸ்நானம், பூஜை நடந்தது.


மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா வரும் செப்டம்பர் 17, 2026 அன்று மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வையொட்டி, அதற்கான பூர்வாங்க ஆன்மீக பூஜைகள் செப்டம்பர் 6ம் தேதி முதல் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகின்றன. கும்பாபிஷேக விழாவின் முக்கியப் பகுதியாக, இந்த புனித நன்னீராட்டு நிகழ்வுகளையும் யாகசாலை பூஜைகளையும் முன்னின்று நடத்த உள்ள தலைமைப் பட்டர்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு, தங்களை ஆன்மீக ரீதியாகத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் ஆச்சார்ய ஸ்நானம் மற்றும் சிறப்பு பூஜைகள் பொற்றாமரைக் குளத்தில் முறைப்படி செய்து வைக்கப்பட்டது. இந்த ஆச்சார்ய தசவித ஸ்நானம் நிகழ்வில் சிவாச்சாரியார்கள் 10 விதமான தூய்மை நீராடல் என்னும் நிகழ்ச்சி மேளதாளங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அதனைத் தொடர்ந்து திருமுறை விண்ணப்பம் தீபாராதனை மற்றும் திருநீறு திருவமுது பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. மாலை பிரதான யாகசாலையில் அங்குரார்ப்பணம் (முளைப்பாரி இடுதல்) மற்றும் பிரதான ஆச்சார்யர்கள் மற்றும் ஸ்தல ஆச்சார்யர்கள் ரக்ஷாபந்தனம் (கங்கணம் கட்டுதல்) நடைபெறும். யாகசாலை மற்றும் கருவறை சார்ந்த முக்கிய சடங்குகள் நடைபெறுவதால், செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


கும்பாபிஷேகத்திற்காக காசியில் இருந்து 1,008 லிட்டர் கங்கை புனித நீரும், 7 புண்ணிய நதிகளில் இருந்தும் 1,008 லிட்டர் புனித நீரும் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், கோவிலில் உள்ள 514 சுவாமிகளுக்கு தேவையான சிறிய மற்றும் பெரிய பித்தளை கலசங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கலசங்களுக்கு நூல் சுற்றும் பணியிலும் சிவாச்சாரியார்கள் ஈடுபட்டு வருகின்றனர். யாகசாலைக்கு தேவையான 9 வகையான தானியங்கள், மூலிகைப் பொடிகள், ஆலங்குச்சி, அரசங்குச்சி, பசுநெய் உள்ளிட்ட 96 வகையான ஹோமப் பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மீனாட்சியம்மன் கோவில் கோபுரங்களுக்கு வர்ணம் பூசப்பட்டு, கோவில் வளாகம் முழுவதும் புதுப்பொலிவுடன் காட்சியளித்து வருகிறது. வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ள மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதால், மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகம் முழுவதும் ஆன்மிக விழாக்கோலம் பூண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !