உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா

திருப்பரங்குன்றம் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன் நகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.


திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள கற்பக விநாயகர் சன்னதியில் உற்ஸவர் விநாயகர் விக்ரகம் மற்றும் விளாச்சேரி குலாலர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மூன்று அடி உயர களிமண் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு பூஜை நடந்தது. கோயில் மண்டபங்களில் எழுந்தருளியுள்ள விநாயகர்கள், பெரிய வைரத்தேரில் உள்ள விநாயகர் சிலைகளுக்கு கொழுக்கட்டை படைத்து தீபாராதனை நடந்தது.


திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் ஐந்து நாட்களாக நடந்த லட்சார்ச்சனை, யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு, மூலவர், உற்ஸவருக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது. மஹா கணபதி ஹோமத்தை தொடர்ந்து மாலையில் மூஷிக வாகனத்தில் சுவாமி விதி உலா நிகழ்ச்சியில் அருள்பாளித்தார்.


பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கிய விநாயகர் சதுர்த்தி விழா, 108 சங்காபிஷேகம், யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை அபிஷேகம், சிறப்பு பூஜை முடிந்து மூலவருக்கு வெள்ளிக்கவசம் சாத்துக்குடி செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. மாலையில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டார்.


திருநகர் மருது பாண்டியர் தெரு ஆனந்த விநாயகர் கோயிலில் 25வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆனந்த விநாயகர் மகளிர் சபா நிர்வாகிகள் விழா ஏற்பாடுகள் செய்தனர். திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி ராஜசியாமளா மகா வராஹி அம்மன் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்சிஷ்ட கணபதிக்கு அபிஷேகங்கள் முடிந்து கவசம் சாத்துக்குடியானது. பின்பு யாகம் வளர்த்து பூஜை, தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !