உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுமலையில் விநாயகரை சுற்றி வந்து வணங்கிய யானைகள்

முதுமலையில் விநாயகரை சுற்றி வந்து வணங்கிய யானைகள்

கூடலூர்: முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில், நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் மணி அடித்தபடி கோயிலை சுற்றி வந்து விநாயகரை வணங்கியது.


நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று, மாலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் நடந்தது. விழாவை முன்னிட்டு அங்குள்ள விநாயகர் கோவிலில், பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய முறைப்படி பூஜைகள் செய்தனர். தொடர்ந்து, வளர்ப்பு யானைகள் கிருஷ்ணா, பொம்மி ஆகியவை மணி அடித்தபடி கோயிலை சுற்றி வந்து விநாயகரை வணங்கியது. கோவில் முன்பு வரிசையாக நின்ற வளர்ப்பு யானைகள் பிளிரியப்படி தும்பிக்கைகளை உயர்த்தி விநாயகரை வணங்கியது. இந்நிகழ்வு, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து, வளர்ப்பு யானைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் உணவுகளுடன் பழங்கள், பொங்கல் வழங்கப்பட்டது. விழாவில் முதுமலை துணை இயக்குனர் வித்யாதர், கூடலூர் வன அலுவலர் தேவராஜ், யானைகள் முகாம் வனச்சரகர் ராமர் வன ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !