காட்டுப்பட்டியில் மாடு மாலை தாண்டும் பாரம்பரிய திருவிழா
சாணார்பட்டி: -சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி காட்டுப்பட்டியில் மாடு மாலை தாண்டும் பாரம்பரியமான விழா நடந்தது.
முன்னதாக அங்கு விநாயகர், பாலமுருகன், கொண்ட தாத்தா ஆகிய கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கி நடந்தது.
தொடர்ந்து வேத பாராயணம், நவகிரக ஹோமம் தீபாராதனை, மகாபூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. முடிவில் கோபுல கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று மாலை, கிராமத்தின் மந்தையில் மாடு மாலை தாண்டும் பெருவிழா நடந்தது. இதில் நத்தம், திண்டுக்கல், கரூர், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன. அவைகள் ஒரு இடத்திலிருந்து மொத்தமாக அவிழ்த்து விடப்பட்டு ஓடத் தொடங்கின. அதன் பின்னால் இளைஞர்கள் கையில் குச்சியுடன் காளைகளுடன் ஓடி வந்தனர். வெற்றிக்கான வெண்மை நிறத்திலான துண்டை காளையுடன் தாண்டி ஓட்டத்தில் முதலிடம் வந்த காளைகளுக்கும், காளையர்களுக்கும் மஞ்சள் பொடிகளை பெண்கள் துாவி, கோயில் பிரசாதங்களுடன் கூடிய பரிசுப் பொருட்கள் வழங்கி கவுரவித்தனர். இந்த பாரம்பரியமான விழாவை காண கம்பிளியம்பட்டி, சிலுவத்துார், செங்குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமத்தினர் கலந்து கொண்டனர்.