உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

மயிலாடுதுறை: திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெள்ளக்குளம் என போற்றப்படும் அண்ணன் பெருமாள் கோவில் கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ அண்ணன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. குமுதவல்லி நாச்சியார் அவதார ஸ்தலமான இங்கு திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் செய்துள்ளார். இத்தலத்து பெருமாளை சேமிப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் திருப்பதி பெருமாளை சேவிக்க செல்லும் முன் பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து அண்ணன் பெருமாளை சேவித்து செல்கின்றனர்.


இக்கோவிலின் பிரம்மோற்சவ விழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது தொடர்ந்து பெருமாள் கொடிமரம் முன்பு எழுந்தருள கோகுல் பட்டாச்சாரியார் தலைமையிலானோர் வேத மந்திரங்கள் ஓதி கொடி மரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். அதனை அடுத்து மங்கல வாத்தியங்கள் முழங்க எட்டு மணிக்கு கன்யா லக்னத்தில் கொடி மரத்தில் கருட கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கொடி ஏற்றத்தைக் கண்டு பெருமாளை தரிசித்தனர். பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்வாக 18 ஆம் தேதி கருட சேவை, 21 ஆம் தேதி திருக்கல்யாணம், 22 ஆம் தேதி திருத்தேர் மற்றும் தீர்த்தவாரியும், 24 ஆம் தேதி கொடி இறக்கம், 25ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. உற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கணேஷ் குமார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !