ரிஷி பஞ்சமி, சப்த ரிஷிகளை நினைத்து மனதால் வழிபட்டாலும் அறியாமல் செய்த பாவங்கள் நீங்கும்
விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாள் ரிஷி பஞ்சமி கொண்டாடப்படுகிறது.. சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்கள் மற்றும் அருந்ததியை இந்த நாளில் வழிபடுகிறார்கள்.
ஆகாயத்தில் வடக்குத் திசையில் கிழக்கு நுனியாய் பெட்டி உண்டி போல் விளங்குகிறது. சப்தரிஷி மண்டலம். கிழக்கு நுனியில் உள்ள நட்சத்திரத்தில் இருப்பவர் மரீசி. அவருக்கு மேற்கே சற்றே தாழ்ந்து காணப்படுவது அருந்ததியோடு கூடிய வசிஷ்டர். அவருக்கு மேற்கில் சற்றே உயர்ந்து காணப்படுபவர் ஆங்கிரஸ். அவருக்கு அருகில் மேற்கே சதுக்கமாயுள்ள நான்கு நக்ஷத்திரங்களில் வடகிழக்கில் இருப்பவர் அத்திரி. அத்திரிக்குத் தெற்கில் இருப்பவர் புலஸ்தியர். அவருக்கு மேற்கில் புலகர். அவருக்கு வடக்கில், மண்டலத்துக்கு வடமேற்கில் இருப்பவர் கிரது மகரிஷி. இவர்களை சப்தரிஷிகளாகச் சொல்கிறது விஷ்ணு புராணம். இவர்களோடு கஸ்யபர். பரத்வாஜர், கவுசிகர் (விஸ்வாமித்திரர்), ஜமதக்னி இவர்களும் இன்று பூமிக்கு இறங்கி வருகிறார்கள். இவர்களை பூஜிக்கும் திருநாளே ரிஷிபஞ்சமி, முதலில் யமுனா பூஜையைச் செய்துவிட்டு, வயதான, இந்த பூஜையைச் செய்வார்கள். இதனால் கொடிய பாபங்களும் விலகும். அஷ்டதள தாமரைக் கோலமிட்டு அதன்மீது நூல் சுற்றிய கலசம் வைத்து சாஸ்திரிகளைக் கொண்டு நடத்த வேண்டிய பூஜை இது. சப்த ரிஷிகளை நினைத்து மனதால் வழிபட்டாலும் அறியாமல் செய்த பாவங்கள் நீங்கும். மகாலட்சுமி விரத தினமான இன்று குடும்பத்திற்கு ஐஸ்வரியம், கடன் நிவர்த்தி, மன அமைதி மற்றும் நீண்ட ஆயுள் வேண்டி லட்சுமி தேவியை வழிபடுகின்றனர். இன்று பசுந்தீவனம் வழங்குவதும், பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பதும் புண்ணியமானதாகும்.