கடலுாரில் விநாயகருக்கு 74 கிலோ பிரம்மாண்ட லட்டு படையல்
கடலுார்: கடலுாரில் உள்ள சுவீட்ஸ் கடையில், 74 கிலோ எடை கொண்ட லட்டு தயாரித்து, விநாயகருக்கு படையல் செய்யப்பட்டது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ஸ்ரீராம் சுவீட்ஸ் கடையில், ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரம்மாண்டமான லட்டு தயாரித்து, விநாயகருக்கு படையல் செய்வது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி 74 கிலோ எடை கொண்ட லட்டு தயாரித்து விநாயகருக்கு படையல் செய்யப்பட்டது. இதுகுறித்து கடை உரிமையாளர்கள் விஜய், வினய் கூறுகையில், ‘மக்களின் வாழ்க்கை இனிமையாக அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரம்மாண்டமான லட்டு தயாரித்து பிள்ளையார் வழிபாட்டை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். இந்தாண்டு 74 கிலோ எடையிலான லட்டு, 15 பேர் அடங்கிய குழுவினரால் 3 நாட்கள் தயார் செய்யப்பட்டது. 33 கிலோ கடலை மாவு, 37 கிலோ சர்க்கரை, 35 கிலோ நெய், 3 கிலோ முந்திரி, 2 கிலோ திராட்சை, 250 கிராம் ஏலக்காய் ஆகிய பொருள்களை பயன்படுத்தி லட்டு தயாரிக்கப்பட்டது. 3 நாட்களுக்கு பிறகு இந்த லட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்’ என்றனர்.