உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாவட்டம் தோறும் விநாயகர் சிலை பிரதிஷ்டை

மாவட்டம் தோறும் விநாயகர் சிலை பிரதிஷ்டை

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில், 1,780 இடங்களில் விநாயகர் சிலைகள், நேற்று பிரதிஷ்டை செய்து, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வழக்கம் போல், நகரம் மற்றும் கிராமப்புறங்களில், முக்கிய சந்திப்புகளில், பொது இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடந்தன. விழுப்புரத்தில், பழைய பஸ் நிலையம், ரயில் நிலையம், மந்தக்கரை, முத்தோப்பு, சித்தேரிக்கரை, வடக்குத் தெரு, மேல்தெரு, வண்டிமேடு, தந்தை பெரியார் நகர், சாலாமேடு, வி.மருதுார், நரசிங்கபுரம், கே.கே.ரோடு, மகாராஜபுரம், கீழ்ப்பெரும்பாக்கம், பாணாம்பட்டு, ஆனாங்கூர், கண்டமானடி, அரியலுார், கண்டம்பாக்கம், மரகதபுரம், காணை, கெடார், வளவனுார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 5 அடி முதல் 10 அடி உயரம் வரை பிரமாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கற்பக விநாயகர், வலம்புரி விநாயகர், சித்தி விநாயகர், பல்வேறு வாகனங்களில் அமர்ந்த விநாயகர் என விதவிதமான உருவங்களில் வடிவமைக்கப்பட்டிருந்த இச்சிலைகளுக்கு பந்தல் அமைத்து, மாலை சிறப்பு வழிபாடுகள் நடந்தது. விழுப்புரம் பகுதியில் 450 சிலைகளும், திண்டிவனம் பகுதியில் 320 சிலைகளும், செஞ்சி பகுதியில் 450 சிலைகளும், கோட்டக்குப்பம் பகுதியில் 210 சிலைகளும், விக்கிரவாண்டி பகுதியில் 350 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. மாவட்டம் முழுதும், 1780 சிலைகள் வைத்து வழிபாடு நடந்தது. மேலும், மாலை நேரங்களில் கூடுதலாக பல இடங்களில் சிலைகள் அமைத்து வழிபாடுகள் நடந்ததால், எண்ணிக்கை 1,800க்கும் அதிகரித்துள்ளதாக போலீசார் தெரி வித்தனர்.

மேட்டுப்பாளயைம் ஊரக பகுதி

ஊரக பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா, கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அன்னூர், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில், ஹிந்து அமைப்புகள் சார்பில் 700க்கும் மேற்பட்ட இடங்களில் வெவ்வேறு அலங்காரங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை மற்றும் வழிபாடு விமரிசையாக நடந்தது. மேட்டுப்பாளையம் மேட்டுப்பாளையம் தாலுகாவில், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் ஹிந்து முன்னணி சார்பில் 272 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் சக்தி விநாயகர் கோவிலில், மூலவர் தங்க கவசத்தில், ராஜா அலங்காரத்தில் அருள்பாலித்தார். காட்டூர் வலம்புரி விநாயகர் கோவிலில், 45ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விழாக்கால சுவாமி வெள்ளிக்கவசத்தில் அருள்பாலித்தார். இன்று மாலை,6:00 விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.

இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் கூறுகையில், கடந்த தி.மு.க., ஆட்சியில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, பல இடர்பாடுகளைக் கொடுத்தனர். த.வெ.க., அரசு இடையூறு ஏதும் செயய்வில்லை. அதற்காக நன்றி. காரமடை அரங்கநாதர் கோவில், யானைகள் முகாம் நடைபெறும் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆகியவற்றுக்கு தமிழக அரசு யானைகள் வழங்க வேண்டும் என்றார்.

சூலூர், கருமத்தம்பட்டி, நீலம்பூர் சுற்று வட்டார பகுதிகளில், 177 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் துவங்கின. இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத், வீர இந்து சேனா உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. சூலூர் பெருமாள் கோவில் திடலில், இந்து முன்னணி சார்பில், பெரிய நந்தி விநாயகரை வழிபடுவது போல் சிலை அமைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், சிவ வீர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடந்தது. பல்வேறு பகுதிகளில் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.


அன்னூர் வட்டாரத்தில், முக்கனூர், கரியாக்கவுண்டனூர், குமாரபாளையம், கரியாம்பாளையம், கணேசபுரம், பசூர் உள்பட 39 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.


அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் முன் உள்ள பாத விநாயகர் கோவிலில் நேற்று ஹிந்து முன்னணி சார்பில் அதிகாலையில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவில்பாளையம் பஸ் ஸ்டாண்ட் எதிரே ஹிந்து முன்னணி சார்பில் 11 அடி உயர விநாயகர் சிலை நேற்று காலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

நாளை மதியம் 2:30 மணிக்கு, அன்னூர் ஒன்றியத்தில் உள்ள சிலைகள் ஓதிமலை பாதைக்கு கொண்டுவரப்பட்டு விசர்ஜன ஊர்வலம் துவங்குகிறது. ஊர்வல முடிவில் சிறுமுகை அருகே பவானி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.

எஸ்.எஸ். குளம் ஒன்றியத்தில் 27 இடங்களில் சிலைகள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டன. நாளை விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. துடியலூர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகிறது.

பெ.நா.பாளையம் கோவை வடக்கு துடியலூர், சின்ன தடாகம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஹிந்து அமைப்புகள் சார்பில், 209 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

மும்பை லால்பார்க் விநாயகர், வனத்தில் அருவி நடுவே விநாயகர் என பல்வேறு வடிவங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்தன. விழாவை ஒட்டி பக்தர்களுக்கு பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை, அன்னதானம், வழங்கப்பட்டது. நரசிம்மநாயக்கன்பாளையத்தில் கோவில் வடிவில் செட் அமைத்து ட்ரம்ஸ் இசை நிகழ்ச்சி, ஆசிர்வாதம் வழங்கும் தத்ரூபமான யானை அமைத்து, பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைத்து வழிபாடு நடந்தது. இந்த சிலைகள், நாளை வெள்ளக்கிணறு குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட உள்ளன.

கோவை

விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி நகரில் 780 சிலைகள், புறநகரில் 1,600 சிலைகள் என்று 2,380 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. 3 அடி முதல் 11 அடி வரையிலான பிரம்மாண்ட சிலைகள் பொது இடங்களிலும், நகரின் முக்கிய சந்திப்புகளிலும் மக்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்தன. சிறப்பு பூஜைகள், கலைநிகழ்ச்சிகள், நாட்டிய நடன நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தன. ராஜவீதி தேர்நிலை திடலில் உயரமான, 11 அடி உயர ராஜவிநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்து முன்னணி சார்பில் ரத்தினபுரி இரட்டை பைப் மைதானத்தில், கஜமுக விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சுந்தராபுரம் அண்ணா காலனி வீர விநாயகர் கோயிலில் 8 அடி உயரத்துக்கு வீரவிநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

வெள்ளலூர் சாலை சாமண்ணா நகரில், உலகக் கோப்பை கால்பந்துகளோடு விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தார். ஆர்.எஸ்.புரம் லைட் ஹவுஸ் சாலையில் சிவசேனா சார்பிலும், சின்னவேடம்பட்டியில் பாரத்சேனா சார்பிலும், சிங்காநல்லுார் மற்றும் வி.கே.கே.மேனன் சாலையில் விஷ்வஹிந்து பரிஷத் சார்பிலும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.

நேற்று இரவு முத்தண்ணன் குளத்திலும், குறிச்சி குளத்திலும், சிங்காநல்லுார் குளத்திலும் இந்து அமைப்புகள் சார்பில் விசர்ஜனம் செய்யப்பட்டது. இன்றும் விசர்ஜனம் நடக்கிறது.

தொண்டாமுத்தூரில் வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்கள் -16, ஹிந்து முன்னணி -10, பா.ஜ. -2, சக்திசேனா -1, அகில பாரத மக்கள் கட்சி- 1, ஹிந்து மக்கள் கட்சி- 2 என மொத்தம், 32 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஹிந்து முன்னணி 21 சிலைகளும், விஷ்வ ஹிந்து பரிஷத் -2, பொதுமக்கள்- 24 என மொத்தம் 47 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், வன விநாயகர் சதுர்த்தி குழு- 6, ஹிந்து முன்னணி 18, பா.ஜ.2, ஹிந்து மக்கள் கட்சி -1, பொதுமக்கள்- 17 என, மொத்தம் 44 சிலைகளும்; காருண்யா நகர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், வன விநாயகர் சதுர்த்தி குழு- 6, பொதுமக்கள்- 6, ஹிந்து முன்னணி -2 என, மொத்தம் 14 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஹிந்து முன்னணி- 17, பா.ஜ. -2, பொதுமக்கள் -29 என மொத்தம், 48 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் வைக்கப்பட்டுள்ள, 185 விநாயகர் சிலைகளும், நாளை விசர்ஜனம் செய்யப்பட உள்ளன.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் 1,300 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி நகர பகுதியில் 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டன. காய்கறி மார்க்கெட் பகுதியில் கற்பக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டது.

அதேபோல், மந்தைவெளி, எம்.ஆர்.என்., நகர், சேலம் மெயின்ரோடு, சங்கராபுரம் ரோடு, கச்சிராயபாளையம் சாலை என நகரின் அனைத்து பகுதிகளிலும் 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மாவட்டம் முழுவதும் 1,300 சிலைகள் பிரதிஷ்டை செய்து, கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

நகரப்பகுதியில் உள்ள சிலைகள் அனைத்தும் நாளை 16ம் தேதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கச்சிராயபாளையம் கோமுகி அணையில் விஜர்சனம் செய்யப்பட உள்ளது. பிற சிலைகள் மாவட்டத்தில் அந்தந்த பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நீர்நிலைகளில் விஜர்சனம் செய்யப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !